Saturday, January 28, 2012

ORU KUTTY KATHAI!


ஒரு குட்டி கதை! 

முன்னொரு காலத்தில், மடையூர் என்கிற கிராமத்தில் பிரம்மானந்த சாஸ்த்ரி என்னும் குருக்கள் ஒருவர் வாழ்ந்து வந்தார். 

மடையூர் மக்கள் அனைவரும் அவரை தெய்வத்திற்கு இணையாக மதித்து வணங்கினர். ஊரில் எந்த ஒரு முடிவு எடுக்கப் பட்டாலும், அது பிரம்மானந்த சாஸ்திரிகள் அருள் கூறிய பிறகே நடக்கும். இத்தனைக்கும் காரணம், சரஸ்வதி தேவியே சாஸ்திரிகளுக்கு நேரடியாக காட்சியளித்து அருள் பாவித்ததுதான். 

அன்று முதல், பிரம்மானந்த சாஸ்த்ரிகள் மடையூரின் கண்கண்ட தெய்வமாக பூஜிக்கப்பட்டார். 

ஆனால், பிரம்மானந்த சாஸ்திரிகளுக்கு ஒரு பெரும் கவலை இருந்தது. அது அவரது மகன் வித்யாதரனைப் பற்றியது. சாஸ்திரிகள் தனது மகனை தன்னைப் போன்றே ஒரு தெய்வீகவாதியாக ஆக்கிவிட வேண்டும் என நினைத்தார். ஆனால், வித்யாதரனோ, தன் தந்தையின் கனவை அதிகம் பொருட்படுத்தாமல், சுய வியாபாரம் செய்து முன்னேர வேண்டும் என்று நினைத்தான். 

ஆனால், தகுந்த அறிவின்மையின் காரணமாகவும், ஆற்றலிண்மையின் விளைவாகம், அவனால் எந்த வியாபாரத்திலும் வெற்றியடைய முடியவில்லை. 

வெகுநாட்கள் இதை சலித்துக்கொண்டிருந்த சாஸ்த்ரிகள், ஒரு நாள் பொறுமையிழந்து தனது மகனை காசிக்கு வேதங்கற்க அனுப்பிவைத்தார். 

பல வருடங்கள் காசியில் தங்கி வேதங்கள் கற்றவனாய் ஊர் திருப்பினான் வித்யாதரன். அதன் பிறகு தனது மகனின் ஞானத்தையும் பக்தியையும் ஊரிற்கு பறைசாற்றும் விதமாக, தன் மகனை, தன்னைப் போலவே சரஸ்வதி தேவியின் அருள் பெற தவம் புரியச்செய்தார் சாஸ்த்ரிகள். 

தன் தந்தையின் கட்டளையை ஏற்று, நீண்ட காலம் கடும் தவம் புரிந்தான் வித்யாதரன். இறுதியில், தேவியின் அருள் பெற வித்யாதரன் ஒரு பெரும் யாகம் நடத்தவேண்டியதாக இருந்தது. சாஸ்த்ரிகள் யாகத்திற்கு தேவயான அனைத்தையும் உடனிருந்து நடத்தினார். அந்த யாகம் பல நாட்கள் நீடித்தது. ஊர் மக்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக இந்த செய்தி தெரியப்பட, அந்த ஊர் மக்கள் அனைவரும், வித்யாதரனின் யாகத்தை நேரில் பார்க்க பெரும்திரலாக வந்தனர். 

பதினாறு நாட்கள் அந்த யாகம் நீடித்திருந்த நிலையில், பெரிய தீச்சுவாலையின் முன்பு அமர்ந்து, யாகம் மேற்கொண்டிருந்த வித்யாதரன், சோர்வுற்றவனாய், தன் தந்தையிடம், 

“இல்லை தந்தையே. நான் கற்ற அனைத்து வேதங்களையும், நான் பயின்ற அனைத்து மந்திரங்களையும் பிரயோகித்து பார்த்துவிட்டேன். சரஸ்வதி தேவி எனக்கு காட்சியளிக்கவில்லை. எனக்கு போதிய ஞானம் இல்லை என்று நினைக்கிறேன். இத்துடன் யாகத்தை முடித்துக்கொள்வது தான் முறை.” என்றான். 

பிரம்மானந்த சாஸ்த்ரிகள் அவனை கடும் சினத்துடன் பார்த்து, “முட்டாளே, எதிரில் இருக்கும் தீயில் சரஸ்வதி தெரிகிறாள் என்று உரக்க கூறி, இரு கைகளையும் உயர்த்தி கும்பிடு. மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன்.” என்றார்.

"அட!"    அன்று, அந்த நொடியில் வித்யாதரன் ஞானம் பெற்றான்! 


பின்பு, தன் தந்தையைப் போலவே சரஸ்வதி தேவியின் அருள் பெற்ற வித்யாதர சாஸ்த்ரிகள், பல வருட காலம் மடையூர் மக்களுக்கு ஆசி கூறிவந்தார். 


--- முற்றும்---

1 comment:

  1. Thoonilum irukkum thurumbilum irukkum dheivam ithu thaano!

    'ADA... ADA...ADADA' (Ippozhuthu enakkum gyanam vanthathu)!

    ReplyDelete