Friday, May 6, 2011

இந்தியம்

இந்தியம்

'ங்க வெயிட் பண்ணுங்க. எஸ்.ஐ இப்ப வந்திடுவாரு.'

நான் முதன் முறையாக ஒரு காவல் நிலையத்தை நேரில் பார்கிறேன். எல்லாம் சரியாகத்தானே இருக்கிறது! ஒரு பழைய வீட்டை ஸ்டேசனாக மற்றியிருக்கிறார்கள். எல்லோரும் தங்கள் வேலையை அமைதியாக கவணிக்கிறார்கள். ஏனோ! நம் சினிமாவில்தான் எவ்வளவு மிகைபடுத்தி காட்டுகிறார்கள். 

நான் யோசனையில் இருக்கும்போதே என்னைக் கடந்து, தன் அறைக்குச் சென்றார் 'எஸ்.ஐ'. சற்று நேரம் கழித்து என்னையும் அவர் அறையில் அனுமதித்தார். 

'சொல்லுங்க.' 

'சா.... ர்ர்ர்ர்'... 'ஏனோ தெரியவில்லை. எனக்கு குரல் கம்மியது. எதற்காக? முதல்முறை ஒரு போலீஸ் அதிகாரியை இவ்வளவு அருகில் பார்ப்பதாலா?. அவர் கருத்த தேகம், நேரான பார்வை, மிரட்டும் மீசை, இறுகிய குரல்... பயம் இருக்கலாம்தான். ஆனால் நான் இங்கு வந்தது எனக்காக அல்ல. இந்த காவல் துறை அதிகாரிக்காக. அவருக்கு தேவையான ஒரு தகவலை தெரிவிப்பதற்காக. நான் செய்யப்போவது ஒவ்வொரு இந்தியனும் செய்யவேண்டியது. மேலும் நான் ஒரு அரசு ஊழியன். எனக்கு மற்ற குடிமகனை விட பொறுப்பு அதிகம். அதனால் குரலை சரிசெய்து கொண்டு சொல்லவந்ததைச் சொன்னேன்.' 

'சார். நாலுநாளுக்கு முன்ன திருவான்மையூர் டிப்போ பக்கத்துல ஒரு கொலை நடந்ததே! அதைபற்றி சொல்லாம்னு வந்தேன்'

'சொல்லுங்க.' என் முகத்தைக்கூட பார்க்காமல், அவர் மேசைமேல் எதையோ தேடிக்கொண்டிருந்தார். 

கொலை என்பது ஒரு மனிதனின் வாழ்வில் எத்தனை பெரிய அத்தியாயம். ஒரு உயிரை முழுக்கமுழுக்க மற்றொரு உயிர் பறிப்பது. இத்தகைய மிகப்பெரிய குற்றத்திற்கு இந்த காவல் நிலையத்தில் இவ்வளவுதான் மரியாதையா?. 

இருந்தும் விடாமல்...'இல்ல சார், நான் அந்த கொலையை நேரில் பார்த்தேன்' இந்தமுறை அழுத்தமாகச் சொன்னேன். 

இப்போது என்னை பார்க்கிறார். 'என்ன பாத்தீங்க?' 

'நாலுபேரு சார். முகத்த வேட்டியால மறைச்சு கட்டிட்டு, ஒரு ஆள தொரத்தி தொரத்தி வெட்டினாங்க. செத்த ஆளுக்கு நாப்பது நாப்பத்தஞ்சு வயசு இருக்கும். ஏதோ பேங்க்ல வேலை பார்த்தவர் போல இருந்தார்'

 'செத்தவரப்பத்தி எங்களுக்கு தெரியுமுங்க. கொலை செய்தவன் யாருடைய முகத்தையாவது பார்தீங்களா?'

'இல்ல சார். ஆனால் வெட்டியவன் ஒருத்தன் கையில 'சாமி'னு பச்சைகுத்திருந்துச்சு.' 

ஆழமான சிந்தனையில் ஐந்து நிமிடங்கள் விட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்தவர், ஒரு ஏட்டை அழைத்து ஏதோ ஒரு ஃபைலை எடுத்துவர கட்டளையிட்டார். 'சபாஸ்!' என் கடமைக்கான அங்கிகாரம் கிடைக்கத் தொடங்கிவிட்டதை உணர்ந்தேன். 

ஏட்டு அந்த ஃபைலை எடுத்துவரும் இடைவேளையில் எஸ்.ஐ, 'நீங்க என்ன பண்ணுறீங்க?' 

'சார்! என் பேரு ஆனந்த். நான் அம்பத்தூர் தாலுக்காபீஸ்ல வேலை பார்கிறேன். இங்க 'ஓ.எம்.ஆர்'ல இருக்கிற என் மாமாவை பார்பதற்காக வந்திருந்தேன். அப்போதான் இந்த கொலையை பார்தேன். ரெண்டு நாள் கொஞ்சம் வேலையாய் இருந்துச்சு. அதான் இன்னிக்கு உங்ககிட்ட சொல்லலாம்னு..'

'நீங்க பார்த்ததை அப்படியே ஒரு ரிட்டர்ன் ஸ்டேட்மெண்டா எழுதிகொடித்திடுங்க. அப்புறம்...' 

பேசிக்கொண்டிருக்கையில் ஏட்டு அறைக்குள் நுழைந்தார். ஆனால் அவர் கையில் ஃபைல் இல்லை. வந்தவர் எஸ்.ஐ காதில் ஏதோ முனுமுனுக்க, எஸ்.ஐ ஒரு சலிப்பு சலித்துக்கொண்டு தன் தொப்பியை தலையில் மாட்டிக்கொண்டு 'அவசரமா பந்தோபஸ்து டியூட்டி வந்திடுச்சுங்க. நீங்க வெளியே ரைட்டர் கிட்ட உங்க ஸ்டேட்மெண்டை எழுதி கொடித்திடுங்க. இந்த கேஸ்ல உங்க உதவி எங்களுக்கு ரொம்ப ஹெல்ப் பண்ணும், ஆனந்த். நீங்க எதுக்கும் புதன்கிழமை காலையில இங்க வந்தீங்கன்னா இன்னும் உதவியா இருக்கும்'

'கண்டிப்பா வர்றேன் சார். உஙளுக்கு என்னாலான உதவியை கட்டாயம் செய்து கொடுப்பேன்.'

 'தட்ஸ் த ஸ்பிரிட்'. மற்றபடி கொலைகாரனை சீக்கிரம் புடிச்சரலாம் ஆனந்த்'

'நல்லது சார். அப்ப நான் வர்றேன்.' 

வெளியே ரைட்டரும் வேலையாக இருந்ததனால், புதங்கிழமை வரும்பொழுது என்னையே கைப்பட எழுதிக் கொண்டுவரும்படி கேட்டுக்கொண்டார். 

நான் அங்கிருந்து விடைபெற்றுக்கொண்டேன். 


புதன்கிழமை, காலை 8.40 அதே காவல் நிலையம். 

இரண்டாவது முறை என்பதால், கொஞ்சம் சவுகரியமாக அமர்ந்திருந்தேன். 

மேலும் என் சவுகரியத்தைக் கெடுக்க அந்நேரத்தில் அங்கு யாரும் இல்லை. ஒரே ஒரு காண்ஸ்டபில் மட்டும் வெளியே திண்ணையில் அமர்ந்து 'தந்தி' படித்துக்கொண்டிருந்தார். ஒரு முதியவர், அறைகளை பெருக்கிவிட்டு, உரிமையாக என்னிடம், டீ குடிக்க காசு வாங்கிச் சென்றார். 

மணி பத்தை தொடும்வரை எங்கள் இருவரைத் தவிற வேறுயாரும் வரவில்லை.'லாஸ் ஆஃப் பே'யில் லீவு எடுத்துக்கொண்டு இங்கு வருவதற்காக, மனைவி கடிந்துகொண்டதை, ஒவ்வொரு நிமிடமும் நினைவூட்டியது. 

வெகு நேரம் கழித்து வந்த தொலைப்பேசி அழைப்பில், எஸ்.ஐ இன்று நிலையத்திற்கு வர இயலாததை காண்ஸ்டபில் மூலம் தெரிந்து கொண்டேன். வேறு வழியின்றி நான் கொண்டுவந்த என் வாக்குமூலத்தை காண்ஸ்டபிலிடம் கொடுத்துவிட்டு வெளியே வந்தேன். 

வருடத்தில் 365 நாளும் வேலை பார்க்கும் இத்தனை பெரிய துறையில் இந்த அலைக்கழிப்பு அவ்வளவு தவறில்லை என மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டேன். இத்தனை பெரிய நாட்டில், தினம் தினம் எத்தனை குற்ற்ங்கள். இவற்றை கவனிக்கும் காவல் துறைக்காக என் அறைநாள் விரையம் ஆனது கொஞ்சமும் தவறில்லை. 

காவல் நிலையத்தை விட்டு வெளியே வரும்போது மணி பதினொன்றை நெருங்கிக்கொண்டிருந்தது. காலையில் இருந்து ஒரு காப்பி கூட குடிக்கவில்லை என்பதை வயிரு ரிங்காரம் இட்டு நினைவூட்டியது. 

திருவான்மையூர் டிப்போ அருகில் ஒரு டீ-கடையில் டீ அருந்தும் போதுதான் அதை கவனித்தேன். அதே கைகள். அதே பச்சை எழுத்துக்கள். 'சாமி'. 

இப்போது அவன் முகம் ஒளிவுமறைவின்றி தெள்ளத்தெளிவாக தெரிந்தது. சின்ன சின்ன கண்கள், கறைப் பற்கள். முகத்தை மறைக்கும் தாடி என அத்தனையும் ஞாபகத்தில் ஏற்றிக்கொண்டேன். ஆனால் இது பத்தாது. இவனை முழுவதுமாக காவல் துறையிடம் ஒப்படைப்பதில்தான் எனக்கு திருப்தி. 

என் செல்போனை எடுத்து காவல்துறையின் எண்களை தட்டினேன். நபர் தொடர்பு எல்லைக்கு அப்பாற் பட்டிருந்ததாக கணினிப் பெண் சொன்னால். இதற்கிடயில் அந்த பெயர் தெரியாத 'சாமி' தன் கூட்டாளிகளுடன் கடையை விட்டு வெளியேறினான். 

எனக்கு பதற்றம் அதிகரித்தது. அவனை தொடர்வதா? காவல் துறைக்கு தகவல் சொல்லி அவர்கள் உதவியையும் பெற்றுக்கொள்வதா? 

நான் சிந்திக்க 'சாமி' எனக்கு அவகாசம் கொடுக்காமல் தெருவில் நடக்கத் தொடங்கினான். வேறு வழியின்றி நானும் பின் தொடர்ந்தேன். அவனுக்கு தெரியாமல் 'ஜேம்ஸ் பாண்'டை போல! 

இதே வீதியில் ஐந்து நாளுக்கு முன்தான் இவன் கொலை செய்தான் என்று சொன்னால் எவரும் நம்பமாட்டார்கள். காரணம் - அவன் நடையில் அவன் செய்தகொலைக்கான எந்த அடையாளமும் இல்லை. இவன் எத்த்னை கொலை செய்திருந்தால் இவன் இத்தனை இயல்பாக இருக்கமுடியும். 

மீண்டும் ஒரு பெட்டிக் கடையில் நின்றார்கள். நான் அருகில் சென்று அவர்கள் பேச்சை கவனிக்க, அவன் பெயர் பழனி என்பதை அறிந்தேன். இது போதுமா? 

'நான் சேகரித்த இந்த தகவல்களைக் கொண்டு காவல் துறை இவனை பிடித்துவிடாதா?' இதற்கும் என்னை முடிவெடுக்க விடாமல் பழனி ந்டக்கத் தொடங்கினான். நானும் பின்தொடர்ந்தேன். 

இரண்டு மணிநேரம், அவன் கண்ணில் படாமல் உளவு பார்த்ததில், அவன் வீடுவரை கண்டுபிடித்துவிட்டேன். இது போதுமா? 

போதும்! எந்த விதமான ஆயுதமும் இன்றி இதற்குமேலும் தொடரக்கூடாது. அந்த வீட்டையும், அதன் பாதையையும் மனதில் பதித்துக் கொண்டு மீண்டும் காவல் நிலையத்திற்கு விரைந்தேன். எனக்கு தெரிந்த அத்தனை தகவல்களையும் தற்சமயம் வந்த ரைட்டர் குறித்துக்கொண்டார். 

வீடு திரும்புகையில் நான் அடைந்த திருப்திக்கும், மகிழ்ச்சிக்கும் அளவேயில்லை. காவல் துறைக்கு தகவல் சொல்வதுடன் நிற்காமல், நானே உளவு பார்த்து அவனை கண்டுபிடித்தது எனக்கு பெருமையாகத்தான் இருந்தது. 

இரண்டு நாள் கழித்து காவல் நிலையத்திலிருந்து பழனியை பிடித்துவிட்டதாக வந்த தகவல் என் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியது. மறுநாள் காவல் நிலையத்திற்கு வந்து, நான் அளித்த தகவல்களை உறுதி செய்யுமாறு எஸ்.ஐ கேட்டுக்கொண்டார். 


றுநாள். காவல் நிலையம்

இன்று கூட்டம் அதிகமாக இருந்தது. அதிக வெள்ளை வேட்டிசட்டை உருவங்கள் தென்பட்டன. அவர்களை கடந்து உள்ளே சென்று பார்த்ததில்... 

அதிர்ச்சி!... 

பழனி ஒரு ஓரத்தில் அமர்ந்து பிரியானி பொட்டலத்தை கபளீகரம் செய்துகொன்டிருந்தான். அவனுக்காக அந்த வெள்ளை வேட்டிகள் காவல் துறையிடம் வாக்குவாதம் நடத்திக் கொண்டிருந்தனர். அவனுக்காக வக்கீல் ஒருவர் ஜாமீன் பெற்றுவந்தார். இறுதியில், அவன் காவல் துறையை விட்டு 'ஏ.சி' காரில் அழைத்துச் செல்லப்பட்டான். 

இத்தனையும் என் கண்முன்னே, ஒரு சின்ன நாடகம் போல் வேகமாக நடந்து முடிந்தது. கண் இமைக்கும் நேரத்தில் என் சாகசம், சந்தோஷம் எல்லாம் மறைந்துவிட்டது. மனதை கல்லாக்கிக் கொண்டு அந்த இடத்தைவிட்டு வெளியேறினேன். இந்த ஜனநாயக நாட்டில் எல்லாம் சாத்தியமாகப் பட்டது. இருந்தும் உண்மை நிலைபெறும் என்ற நம்பிக்கையுடன் வீட்டை நோக்கி பயணித்தேன். 


ம்பத்தூர் பேருந்து நிலையத்தைவிட்டு நான் வீடு செல்லும் வழியில், நடுத்தெருவில்... 

மீண்டும் ஒரு கொலை! 

கொன்றவன் முகம் நன்றாக தெரிந்தது. பெரிய மீசை, மூக்கில் ஒரு வெட்டு, ஒற்றைக்காதில் கடுக்கன் என அத்தனையும் அழுத்தமாக என் மூலைக்குள் குடியேறிக்கொண்டது. 

காவல் துறைக்கு தகவல் சொல்லவேண்டுமே! 

இல்லை! மன்னித்துவிடுங்கள்! என் குழந்தைக்கு கணக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கவேண்டும். இன்று வேறு யாராவது காவல் துறைக்கு தகவல் கொடுத்துக்கொள்வார்கள். நான் வருகிறேன். 


முற்றும்.

3 comments:

  1. As usual Good narration...
    Comic Script...
    But The End is not satisfactory.

    ReplyDelete
  2. Indhiyam - a gist of many of the prevailing nook and corner cruel incidents...

    Yet the thoughts and its conversion into words making appropriate presentation in each and every line deserves appreciation...

    Outstanding rhetoric skill throughout the story...

    ReplyDelete
  3. வெள்ளை சட்டைகள்
    கறை படியாது
    வாழ, கறைப்பட்டதனால்
    தானோ என்னவோ........
    நிறம் மாறிப் போகின்றன
    பாமரனின் வாழ்க்கையும்.......

    ReplyDelete