Monday, January 23, 2012

Thoothan

தூ-த-ன் 

ன் ஞாபகங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கா?” கீத்தன் சொன்னதை அதிர்ச்சியின் உச்சத்திலிருந்த என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. ஆனால் அது உண்மை தான். எனக்கு தெரிந்து, எனக்கு ஞாபகம் இருக்கும் முதல் நாளே, நான் என் உடலெள்ளாம் ரத்தமாக... 

அந்த முதல் நாள்.. 

எனக்கு அந்த சித்திரவதைகளெல்லாம் பழகிப்போய் இருந்திருக்கவேண்டும். காரணம், எனக்கு அது அதிக வலியையோ, அதிக ஆச்சரியத்தையோ கொடுக்கவில்லை. எல்லாம் எதிர்பார்த்தவொன்றாகவே இருந்தது. 

தினம் தினம் ஒரு சித்திரவதை. என் உடம்பும் அதற்கு தயாராக இருந்தது. தயார் செய்யப்பட்டிருந்தது என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். 

என் உடலில், என் மனதில் ஒரு புது உணர்ச்சியை உருவாக்கியது அவளின் பார்வைதான். 

கீத்தன்! எட்டடி உயரத்தில், வெழுத்த தேகத்தில், பச்சை விழிகளோடு அவள் என்னை பார்க்கும் பார்வை. ஆயிரம் ஈட்டிகளை என் நெஞ்சில் வீசியது. 

இத்தனை சவுக்கடிகளும் எனக்கு தராத துயரத்தை, அவள் என்னை பார்க்காத நிமிடங்கள் எனக்கு தந்தது. 

கீத்தன், என்னை மேற்பார்வை செய்ய நியமிக்கப்பட்டவள். யாரால்? தெரியாது! தெரிந்துகொள்ளும் அவசியமும் எனக்கு ஏற்படவில்லை. எனக்கு அப்போது புரிந்ததெல்லாம், நான் இந்த உலகிற்கு புதியவன். இவள் எனக்கு புதியவள். ஆனால் இவள் எனக்கு உரியவள். 

எத்தனையோ விதவிதமான உருவங்கள் என்னைச் சுற்றித் திரிந்தாலும், இவள் மட்டும் தான் என் கவனத்தை ஈர்த்தாள். இவள் மட்டும்தான் என் மொழி பேசினாள். 

நாட்கள் செல்லச் செல்ல எங்களுக்கு அதிக தனிமை கிடைத்தது. அவளுடன் நான் பழகும் நேரங்களுக்காக நான் ஏங்கினேன். மெல்ல அவளும் என்னிடம் மயங்கினாள். கீத்தன் - என் கீத்தன் ஆனாள். 

நாங்கள் அதிக நேரம் ஒன்றாக கழித்தோம். 
வார்த்தைகள் இல்லாத மொழியில் பேசிக்கொண்டோம். 
நாங்கள் ஒன்றானோம்! 

அந்த புணர்ச்சியின் முடிவில் அவள் கூறிய வார்த்தைகள் தான், “உங்களிடம் நான் ஒரு உண்மையைச் சொல்ல வேண்டும்.” 

“இதை நான் சொல்வது வெளியில் தெரிந்தால், என் தலை வெட்டப்படும். பரவாயில்லை. இதற்கு மேலும் என்னால் மறைக்கமுடியாது. என் உயிரைவிட நம் காதல் எனக்கு மேலானது.” கீத்தன் 

நான் புரியாமல் விழிக்க., 

“ஆம்! நீங்கள் வேற்று கிரகத்தில் இருந்து கடத்தப் பட்டவர். உங்களுக்கு ஞாபகம் இருக்காது. காரணம், உங்கள் நினைவுகளை இவர்கள் பறிமுதல் செய்திருப்பார்கள்.” 

இது தான் என் அத்தனை அதிர்ச்சிக்கும் காரணம். இத்தனை நாள் இறந்தகாலம், எதிர்காலம் என எதுவும் இல்லாமல் கிடந்த எனக்கு, இவள் செய்தி மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. 

“இவர்கள்?” 

கீத்தன்,“இந்த பால்வீதியின் கூட்டமைப்புத் தலைவர்கள்! சுற்றியுள்ள அத்தனை கிரகங்களையும் அடிமைகளாக்குவதில் எங்கள் நெபுலா கூட்டணியிற்கும், கேனிஸ் கூட்டணிக்கும் பெரும் போட்டி நடக்கிறது. அதன் முதல் கட்டம் தான் இந்த ஆள் கடத்தல்.” 

எனக்கு என் உயிரின் இயற்கை கொஞ்சம் கொஞ்சமாக தெளிவிற்கு வந்தாலும், இப்போதுதான் 'அடுத்து என்ன நடக்கப்போகிறது' என்ற பயம் எழுகிறது. 

“ஒவ்வொரு கிரகத்திலிருக்கும் உயிர்களும், அந்த கிரகத்தில்,ஒரு தலைமை உயிரின் கீழ் செயல்பட வேண்டும். அந்த தலைமை உயிர், எங்கள் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும். இது தான் இவர்களின் திட்டம். உங்களைப் போலவே ஜீவராசிகள் இருக்கும் அத்தனை கிரகத்திலிருந்தும் உயர் ரக உயிர்களை கடத்திவருவார்கள். அவர்களுக்கு அவர்களின் கிரகத்தில் இருக்கும் மற்ற உயிர்களை ஆழும்விதமாக பயிர்ச்சிகளும் அளிக்கப் படும்.” 

அவள் பேசிக்கொண்டு இருக்கும் போதே, அவள் கைகளில் ஏதோ தீபோல் பளிச்சிட, “எனக்கு அழைப்பு வந்திருக்கிறது. நான் உடனே செல்ல வேண்டும்.” என்று கூறி நொடிப் பொழுதில் மறைந்துவிட்டாள். 



நான் இன்று கேட்டவை, என் மனதை அதிகம் வாட்டியது. என்னுடைய ஞாபகங்களை மெல்ல மெல்ல என் ஆழ்மனதிலிருந்து வெளிப்பட வைத்தது. 

அன்றிரவு, நான் கண்கள் மூடிய வேளையில், நான் ஒரு சிறுவனாக பச்சை புல்வெளியில் சுற்றித்திரிந்த காட்சி என் கனவில் விரிந்தது. வண்ணவண்ண பூக்கள். அழகிய நதி. ஆனால், என்னைச் சுற்றியிருந்த ஆடுகளெல்லாம் திடீரென்று பயந்தோட, விண்ணிலிருந்து பெரும் இரைச்சலுடன் என் முன் தரையிறங்கியது ஒரு...... 

என் கனவு முடியும்முன் நான் தட்டி எழுப்பப்பட்டேன். இன்றும் அதே சித்திரவதைகளுக்காக என்னை அழைத்துச் செல்கிறார்கள். எனக்கு விழிகளெல்லாம் 'எங்கே என் கீத்தன்?'. 

மூச்சுக்காற்று தடை செய்யப்பட்ட ஒரு கண்ணாடி பெட்டியில் என்னை அடைத்து வைத்திருக்கும், இன்றைய நாளுக்கான என் இறுதிச் சித்திரவதை முடியும் நேரத்தில் என் கீத்தன் அந்த இடத்தில் தோன்றினாள். 

அவள் பார்வையில் இன்று உயிர் இல்லை. முகமெல்லாம் மேலும் வெழுத்து, உடல் இழைத்திருந்தாள். 

பணியாட்களை அனுப்பிவிட்டு என் அருகே வந்து என் நெற்றியில் அவள் உதட்டை பதித்துக்கொண்டாள். நான் சிரித்தேன். 

அவள் அழுதாள். 

என்ன ஆச்சு கீத்தன்?” 

“நாம் பிரியப்போகும் நாள் நெருங்கிவிட்டது. நீ கடைசி கட்ட பயிற்சிக்கு தயாராகிவிட்டாய். அதைக் கூறத்தான் என்னை நேற்று அழைத்திருந்தார்கள்” 

“எனக்கு புரியவில்லை. இந்த பயிற்சி முடிந்த பின்பு என்னை எங்கே அழைத்துச்செல்வார்கள்?


 “பூமிக்கு! அதுதான் உன் கிரகம். அங்கே உனக்காக அத்தனையும் தயார் நிலையில் உள்ளது!” 

“உன்னை நான் கண்டிப்பாக பிரியவேண்டுமா?” 

“ஆம்! ஆனால் கவலைப்படாதே. நீ அதிக நாள் பூமியில் இருக்க வேண்டியதில்லை. இது ஒரு முதற்கட்ட பரிசோதனைதான். அதனால் குறிப்பிட்ட சில கடமைகளை நீ முடித்த பிறகு, மீண்டும் இங்கு அழைத்துவரப்படுவாய். நான் காத்திருப்பேன்” 

அவள் மீண்டும் என் நெற்றியில் உதடுபதிக்க, புதிதாக சிலர் வந்து என்னை கடைசிகட்ட பயிற்சிக்காக அழைத்துச் செல்ல அவளிடம் அனுமதி வாங்கினார்கள். 

கண்ணில் நீர்பெருக அவர்களுடன் நான் செல்லும் வேளையில் என்னையே பார்த்தவாரு நின்றிருந்தாள் என் கீத்தன். 

மனதை திடப்படுத்திக் கொண்டு என் இறுதி பயிற்சியை முடித்து, பூமியில் என் கடமையை நிறைவேற்றி விரைவில் என் கீத்தனுடம் இணைய ஆயத்தமானேன். 

'என் இறுதிப் பயிற்சி எங்கே? என் இறுதிச் சித்திரவதை என்ன?' 

அவர்கள் என்னை ஒரு மலை உச்சிக்கு அழைத்துச் சென்றனர். 


அங்கே எனக்காக ஒரு சிலுவை நின்றிருந்தது. 


---முற்றும்---

1 comment:

  1. Entirely different concept in a short story with correctly defined expressions of characters makes the plot interesting...

    A good fictional type shot...

    ReplyDelete