Friday, June 17, 2011

பெண்மை!

பெண்மை!
மாலை நேரம். மக்கள் கூட்டம் அலைமோதிய அந்த 'காஃபி ஷாப்'பின் ஒரு மூலையிலிருந்த இருவரை மட்டும் அந்த கெஃபைன் காற்று தீண்டியதாக தெரியவில்லை. தங்கள் கண்முன் திறந்த தனித்திரையில் அத்தனைபேரும் விளையாட்டு, சினிமா, வேலை என மூழ்கிக்கிடக்கையில், அந்த இருவர் மட்டும் சிந்தனையில் ஆழ்ந்திருந்தனர். “

"அவள் என்னவா இருந்தால் என்ன? காதலிக்கும்போது இல்லாத கவலை, காதலை சொல்லும்போது எதற்கு?"”

மதன் எத்தனை சொல்லியும் ரமேஷ் ஆறுதல் அடையவில்லை. வெகு நேரமாக தன் முன் வைக்கப்பட்ட ஐஸ் காப்பிக்குள் விரலை விட்டு விளையாடிக்கொண்டிருந்த ரமேஷ் இறுதியாக வாய்திறந்தான். “

"அப்படியில்லை. என்னதான் 22ஆம் நூற்றாண்டின் முற்போக்குவாதிகளாக இருந்தாலும், இதற்கு என் குடும்பம் சம்மதிக்காது."

"உண்மைதான். ஆனால் ஷெல்லியை பற்றி முழுவதும் தெரியாமல் இப்படி கவலைப்படாதே என்பதுதான் என் வாதம்."

"ஷெல்லி! அவளால் தான் இத்தனை குழப்பங்களும்." ரமேஷ்

மதன்,“ "அவள்???" சிரித்துக்கொண்டான்.

ரமேஷ், "என்னதான் நாம் அறிவியலில் முன்னேற்றம் அடைந்திருந்தாலும், ஒரு மனிதனுக்கு இத்தனை பெரிய சந்தேகம் வரக்கூடாது. எங்கே போய் முட்டிக்கொள்வது, 'நான் காதலிப்பது ஒரு பெண்ணையா இல்லை ஒரு எந்திரத்தையா' என்று?"

ரமேஷ் தொடர்ந்தான், "இதோ இந்த பேப்பரை படித்துப்பார். போன மாதத்தில் மட்டும் இருபத்தி ஒன்பது பேர் பெண் எந்திரங்களால் தங்கள் உடல் உறுப்புகள் களவாடப்பட்டவர்கள். அத்தனையும் காதல் மோசடி!"

இரு கைகளையும் தன் தலைமுடிக்குள் கோர்த்து அமர்ந்திருந்த ரமேஷிடம்,  "இது ஒரு சின்ன பிரச்சனை. உயிரியலில் விடை கிடைக்கலாம்!!" “

"உனக்கு தெரிந்த உயிரியலில், உடனடியாக ஒரு யோசனை சொல். உனக்கு ஆயிரம் புண்ணியம்!"

"இதற்குச் சிறந்த வழி, அவளை வெட்கமிட செய்வது தான். அவள் கன்னத்தில் முத்தமிடு. உயிரினத்துக்கே உரிய 'சிம்பதடிக் நெர்வஸ் சிஸ்டம்' அவள் கன்னத்தை சிவப்பாக்கும்..அவள் பெண்ணாக இருந்தால் மட்டும்!”"

"எந்த யுகத்தில் இருக்கிறாய்? 'கீனோ 4.0.2' வர்சனில் எந்திரங்கள் வெட்கப்பட்டு கன்னம் சிவப்பது மட்டும் அல்ல, கால் விரலால் கோலம் கூட போடுகிறது”."

மதன், "ஈஸ்ட்ரோஜென் சமாச்சாரம்?"

"ஈஸ்ட்ரோஜென், பீரியட்ஸ் எல்லாமே போன நூற்றாண்டிலேயே பெண்கள் தங்கள் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டார்கள்..இப்போது ஆண்களுக்குத்தான் ஹார்மோன் பிரச்சனை எல்லாம்!"

தன் அருகே நடந்து சென்ற பணிப்பெண்னின் காது மடலுக்குப் பின்னே ஒரு 'ஸ்க்ரூ' இருந்ததைக் கண்டு நொந்துகொண்டான் ரமேஷ். நாற்பது ஆண்டு காலம் இந்த எந்திரங்களுடன் பழகியும் தன்னால் இவற்றை மனிதர்களிடம் இருந்து வேறுபடுத்த முடியாததை எண்ணி அங்கலாய்ப் படைந்தான்.

'வியாபாரரீதியாக இந்த பெண் கணினிகள் பெரிய லாபத்தை ஈட்டுகிறதென்றாலும், திருடர்களும் இதை பிரயோகிப்பது தான் கொஞ்சம் வருத்தம்.'


மறுநாள் மாலை எலக்ட்ரோ பூங்காவில்.. “....

"காதலி நல்லல் ஆகுதல் அறிந்தாங்கு , அரியல் ஆகுதல் அறியாதோயே!" என்று பரணர் வரிகளை முனுமுனுத்துக்கொண்டிருந்தான் மதன்.

ரமேஷ், "வருவதாகச் சொல்லி ஏழு நிமிடம் இருபத்தியாரு நொடிகள் ஆகுகிறது. இன்னும் வரவில்லையே. காக்க வைத்தல் மனிதனின் குணம். அவள் பெண்தான்!"

மதன், "சந்தோசப்படாதே! 'ஃபிசிகல் மெமரி டம்'பானால் கூட இதே நிலைமைதான்!"

தொலைவில் ஷெல்லியின் வருகையைப் பார்த்ததும் ரமேஷிற்கு தைரியம் கூறி விடைபெற்றுக்கொண்டான் மதன்.

என்னதான் ரமேஷ் சோற்வுற்றிருந்தாலும் ஷெல்லியின் வாசம் அவனுக்கு புத்துணர்வு தந்தது.

ஷெல்லி, "என்ன ரமேஷ்? அவசரமாய் வரச்சொன்னாய்"

ரமேஷ், "மூன்று வாரத்திற்கு மேலாய் என் மனதில் வறுத்திக்கொண்டிருந்ததை உன்னிடம் சொல்லிவிடத்தான் அழைத்தேன்."

ஷெல்லியின் புருவம் உயர்ந்தது.

"ஆமாம் ஷெல்லி! நான் உன்னை காதலிக்கிறேன்." ஷெல்லியின் இயற்கை தெரியாததால் கொஞ்சம் தயக்கத்துடன் கூறினான் ரமேஷ்.

ஷெல்லியின் கன்னம் சிவந்தது!  ரமேஷிற்கு 'கீனோ 4.0.2' மூளையில் உதைத்தது.

ஷெல்லி, "மன்னித்துக்கொள்ளுங்கள் ரமேஷ். கடந்த மூன்று வாரங்களில் எந்தவொரு நிலையிலும் நான் உங்களை காதலிக்கவில்லை. நான் உங்களிடம் ஒரு சகோதரத்துவத்துடன்தான் பழகினேன். என்றும் நீங்கள் எனக்கொரு சிறந்த நண்பன், சகோதரன். அவ்வளவுதான். நான் வருகிறேன்."

'அதே வசனம்! 20ஆம் நுற்றாண்டு இளைஞர்கள் அதிகம் கேட்ட வசனம்! ஆனால் இந்த வசனத்தால் மகிழ்ச்சியடையும் முதல் இளைஞன்'

காதல் தோல்வி கொஞ்சம் கவலை தந்தாலும், முதல் முறை ஷெல்லியிடம் ஒரு முழுப்பெண்மையை உணர்ந்தான் ரமேஷ்.

மதனிடம் தான் காதலித்தது ஒரு உண்மையான பெண்ணைத்தான் என்று பெருமைபட்டுக்கொண்டான்.

ரமேஷ், "பேசாமல் என் தொந்தக்காரப் பெண்ணையே கல்யாணம் பண்ணிக்கொள்வதாய் என் பெற்றோரிடம் சொல்லப் போகிறேன். நீ என்ன நினைக்கிறாய்?"

மதன், "அஞ்ஞானம் போயிற்றென்று தும்பீ பற - பரமானந்தம் கண்டோம் என்று தும்பீ பற. மெய்ஞானம் வாய்த்ததென்று தும்பீ பற - மலை மேலேறிக்கொண்டோம் என்று தும்பி பற!"

ரமேஷ், "என்ன இது?"

மதன், "இடைக்காட்டுச்சித்தர்"

ரமேஷ், "எதற்கு?"“

பெண்மை!

2 comments:

  1. 'பெண்மை எப்பொழுதும் புரியாத புதிர் தான்' என்னும் கூற்றை மெய்பிக்கும் வகையில் அமைந்த நூற்றாண்டுகள் கடந்த சிந்தனை...!?!

    Story in the form of fictional type imagination yet interesting...

    Felt like laughing when really such a condition comes into existence in future:)...

    ReplyDelete
  2. 22 இம் நுற்றண்டிலும் காதல் தோல்வியா???

    Different Plot! Nice Story Telling!

    ReplyDelete