Friday, March 11, 2011

Kalloorith Thaaikku Oru Kaditham


கல்லூரித் தாய்க்கு ஒரு கடிதம்

அன்புத் தாய்க்கு………………..
இது போர்க்களத்தில் தோட்டாக்களின் அடை மழையில் கந்தகத் தென்றலிலும் கண்களில் சிரிக்கும் தன் தாய்க்கு மகன் எழுதும் கடிதம் அல்ல. ஆனாலும் நான்கு ஆண்டுகளில் நான்கு யுகங்கள் வாழ்ந்துவிட்ட வகுப்பறையாம் கருவறையில் எங்களை மீண்டும் இவ்வுலகிற்க்கு பிரசிவித்து பிரகாசிக்க வைக்கும் கல்லூரித் தாய்க்கு ஒரு பச்சிளம் குழந்தையின் பிரிவுக் கடிதம்…………..
தாயை பற்றி அவன் வளரும்போது கேட்பதை விட அவன் வளர்ந்த பின் கேட்டால் காகிதங்கள் கூட பாசத்தின் ஊற்றெடுக்கும்,அது போல் தான் எங்கள் கல்லூரி வாழ்வும்.முடிவுபெற போகிறது என்று என்று நினைவு வரும்போதெல்லாம் கால்கள் யாருமில்லா தனிமையில் ஓட, கண்கள் கருமேகமாய் மூட, மின்னலாய் தோன்றி மறைகிறது எங்கள் நினைவுகள்……..
முதல் நாள் வாயில் படி மிதிக்கும் போது பெற்றோர் ,ஆசிரியர்,நண்பர்கள் என அனைவரும் சிந்தையில் சிரிப்பார்கள் ஆனால் அடுத்த கணமே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய மந்தையின் சிறு ஆடாய் கண்கள் பிதுங்க, வாழ்வின் மீது ஒரு பயம். ஆனால் எங்களை வாரி அணைத்து புதியதொரு உலகத்தை படைத்தவள் நீ.
பிள்ளையின் தவறுகளை சில நேரம் பெற்ற தாய் கூட பொறுப்பதில்லை,ஆனால் நாங்கள் செய்வது எந்த தவறானாலும் அதை ஏற்று புன்முறுவல் பூக்கும் உன் முகத்தை நான் அறிவேன்.வெறும் கட்டிடம் தானே என ஏளனம் செய்பவர்கள் யாராயினும், தனிமையில் ஒரு நாள் இல்லை மனக்கவலையில் ஒரு நாள் எப்போதவது நின்றிருந்த போது கைகள் தானாய் தூண்களை நோக்கி துணை தேட, வார்த்தைகளும் கூடவே தனிமையில் நடந்த்திருக்கும்…..
எத்தனை எத்தனை இன்பங்கள்?, பல பொழுதுகளை களவாடிய காதல்கள், அன்பில் மறைந்த சோகங்கள், வினையான விளையாட்டுக்கள் மொத்தத்தில் கோடிகள் கொடுத்தாலும் விலை போகாத ஒரு அன்பு நிலம் தாயே உன் உள்ளம்…….
தேர்ச்சி பெற்றதால் எதிரியான நண்பர்கள், தோல்வியடைந்த்ததால் நண்பர்களான எதிரிகள். என வாழ்வின் தத்துவங்கள் ஆறு மாதத்தில் உன் மடியில்………
நாளொரு நண்பர்கள்,பொழுதொரு காதலிகள், கண்களால் பேசும் காதலிகள், பெற்ற குழந்தைகளை பிரிந்து தினம் எங்களை குழந்தைகளாய் ஏற்ற ஆசிரியர்கள், என கூட்டு குடும்பமாய் எங்களை வளர்த்தவள் நீ, மொத்தத்தில் எத்தனையோ தவறுகள் செய்தாலும் சிறு மழலைகள் தானே என பொறுத்து அமைதி கொள்ளும் பல உள்ளங்கள். ஊற்றெடுத்த அன்பு பிரவாகமே உன்னை பிரியும் நாள் வெகுதொலைவில் இல்லை என்பதை எண்ணும் போது கணக்கும் இதயத்தை ஆறுதல் செய்ய வார்த்தை தேடுகிறேன் அகராதியில்.
நாங்கள் செய்த தவறுகள்,குறும்புகள், பெற்ற வெற்றிகள், தோல்விகள் என அனைத்திலும் பங்கு கொண்ட தாயே உன்னை பிரிவதில் வருத்தம் தான் எனக்கு ஆனால் என்னை உலகம் அறிய வைத்த உன்னை இவ்வுலகம் அறிய வைப்பேன் கலங்காதே…… என் கண்களும் கலங்குகின்றன………..
உன் மகன்….
கி.ரஞ்சித் குமார்.

1 comment:

  1. A good salute of a son to his own college... Am sure u will make ur identity in this world thereby making ur mother to be known to entire world...

    ReplyDelete