ஷெர்லாக் செயல்முறை!
இந்த நாலுபேரில் ஒருவன் தான் இதை செய்திருக்க முடியும். யார் அவன்?
நான் எத்தனை பெரிய அறிவாளி! செஸ்ஸில் உலக ஜாம்பவான்களையெல்லாம் திக்குமுக்காட வைத்திருக்கிறேன். என் யுக்திகளை பயன்படுத்தி எத்தனை கம்பெனிகள் இன்று உச்சத்தை எட்டியிருக்கிறார்கள். அப்படிபட்ட என்னிடம் இவர்கள் இதை செய்திருக்கக்கூடாது. இதோ பிடித்துவிடுகிறேன்.
அவனைப் பிடிக்க ஒரு சிறு குறிப்பை தயார் செய்துகொள்கிறேன்.
1) திருடுபோன பொருள் - என்னுடைய ரோலக்ஸ் வாட்ச்
2) இடம் - என் படுக்கையறை
3) நேரம் - புதன் காலை 11 மணி
4) சந்தேகத்துக்குறிய நபர்கள் - வாட்ச்மேன் (அ) தோட்டக்காரன் (அ) கார் டிரைவர் (அ) சமயல்காரன்.
முதலில் ஏதேனும் தடயம் கிடைக்கிறதா என்று பார்ப்போம். இதை அவ்வளவு எளிதில் விட்டுவிடக்கூடாது. நான் யார் என்பதை இவர்களுக்கு தெரியப்படுத்தும் நாள் இது.
தடயம்?
என் படுக்கையறையில் ஏதேனும் கலைந்துள்ளதா? ஏதேனும் கிரீஸ் கறை? செம்மண்? புதினா இலை?
இல்லை. எந்த தடயமும் இல்லை. மிகவும் கச்சிதமாக காரியத்தை முடித்திருக்கிறார்கள் போல!
புதன் காலை பதினோருமணிக்கு யார் என் அறைக்குள் வந்திருக்க முடியும்? அதுவும் நான் குளித்துக்கொண்டிருந்த நேரம்.
சமையல்காரன் தேநீர் கொண்டுவரும் நேரம்! வாட்ச்மேன் ஏதேனும் தகவல் சொல்ல வந்திருக்கலாம்! டிரைவர், நான் அழைத்தாலன்றி என் அறைக்குள் வருவது இல்லை. தோட்டக்காரன் என் அறையை சுத்தம் செய்வது வழக்கம்!
இல்லை. இந்த யூகங்கள் எல்லாம் ஒத்துவராது!
இதற்கு ஒரே வழி, 'அழைத்துவாருங்கள் என் சீஸரை!'
நான் எனது வேட்டைக்காகவே பிரத்யேகமாக வளர்த்துவரும் நாய். முன்னூரு அடி தொலைவில், புதருக்குள் இரை கிடந்தாலும். மோப்பசக்தியால் எளிதில் கண்டுபிடித்துவிடும் ஜெர்மன் ஷெப்பர்டு, என் சீஸர்.
சீஸரை என் அறைக்குள் அனுமதித்தேன்.
ஆனால் சீஸர், நான் நேற்று மிச்சம்வைத்த 'ஷிவாஸ் ரீக'லை சுத்தம் செய்துவிட்டு, போதையில் தட்டுத்தடுமாறி சமையல்காரனிடம் சென்று ஒரு எலும்புத்துண்டை பெற்றுக்கொண்டு தன் கூட்டினுள் சென்று மறைந்துவிட்டது.
'யூ டூ சீஸர்?'
இருக்கட்டும்! இன்னும் ஒரு முறை. என் மொத்த அறிவையும் பயன்படுத்தும் தருணமாக, இன்னும் ஒரேவொரு முறை.
என் அறையை தலைகீழாக புரட்டிப்போட்டு, அங்குளம் அங்குளமாக துழாவியபோது அது கிடைத்துவிட்டது. அலமாரியின் காலில் சிக்கியிருந்த அந்த ஒரு முடி.
நீட்டமாக, ரெண்டு அங்குளத்தில் ஒற்றை முடி. (என்னுடையது கொஞ்சம் சுருட்டை)
இந்த ஒரு முடி போதும். டி.என்.ஏ பரிசோதனையில் திருடன் அழகாக மாட்டிக்கொள்வான்.
சரியாக ஒருவாரம் காத்திருந்தபின் டி.என்.ஏ முடிவுகள் கிடைத்தது.
ஆனால், மீண்டும் வருத்தம். அது அந்த நால்வரில் எவருடைய முடியும் இல்லை.
(பின் அந்த முடி யாருடையது? என் படுக்கையறைக்குள் வேறு எந்த மனிதன் வந்தது? ஒரு வேளை அந்த குட்டை பாவாடை, 'பாய் கட்' ஸ்டெஃபியின் முடியா?... இருக்கலாம்!)
என் அத்தனை அறிவும் இந்த விஷயத்தில் உபயோகமில்லாமல் போய்விட்டது.
இப்போது என்ன செய்வது? எப்படியேனும் எனக்கு என் ரோலக்ஸ் வேண்டும். காவல்துறையை விட்டால் இப்போது வேறு வழியில்லை.
இரண்டு நாள் கழித்து 'எஸ்.ஐ' அனுப்பியதாக ஒரு கான்ஸ்டபில் வீட்டுக்கு வந்தார்.
'டி.ஐ.ஜி' என் நண்பர். அவர் வரவில்லையென்றாலும் குறைந்தபட்சம் ஒரு 'எஸ்.ஐ'யாவது அனுப்பியிருக்கவேண்டும், என்று நொந்துகொண்டேன்.
கான்ஸ்டபில் தன் கடமைக்கு என் அறையை சுற்றிப்பார்த்தார். என் அறையின் 'எல்.ஈ.டி'யின் விலையை விசாரித்துக்கொண்டார். இறுதியாக,
"நீங்க யாரு யாருமேல சந்தேகப்படுரீங்க சார்" என்று என்னையே விசாரித்தார்.
நான் அந்த நால்வரை அவருக்கு அறிமுகப்படுத்தினேன்.
நால்வரையும் மேலும் கீழும் பார்த்தவர், 'படார்' என்று தோட்டக்காரனின் தலையில் அடித்தார்.
என்ன ஆச்சரியம்! ஐந்து நிமிடத்திற்குள் தோட்டக்காரன் உண்மையை ஒத்துக்கொண்டு, தன் டூல்ஸ் பெட்டியிலிருந்து என் ரோலக்ஸை கொண்டுவந்து ஒப்படைத்தான்.
எனக்கு இன்னும் வியப்பு தீரவில்லை.விசாரனையென்ற பெயரில் ஒரு சிறு கேள்வி கூட கேட்காமல், வந்த பத்தாவது நிமிடத்தில் எப்படி இந்த கான்ஸ்டபிலால் இதை இத்தனை சுலபமாக கண்டுபிடிக்க முடிந்தது. என் தோல்வியை மனதில் ஏற்றுக்கொண்டு அந்த ஆச்சரியத்திற்கான விடையை கான்ஸ்டபிலிடமே கேட்டேன்.
கான்ஸ்டபில், “இதுல இன்ன சார் பெரிய ஆச்சரியம். மொச புடிக்கிற நாய் மூஞ்சிய பாத்தா தெரியாது. இவன் திருடுனதுதான் இவன் மொகரையிலையே தெரியிதே!” என்று தனக்கு கிடைத்த புகழ்ச்சியை ஒதுக்கிவிட்டு, வடைபெற்றுக்கொண்டார்.
இந்த வித்தியாசமான அனுபவத்திலிருந்து எனக்கு ஒரே ஒரு உண்மை மட்டும் புரிந்தது.
'சில சமாச்சாரங்களுக்கு ஷெர்லாக் ஹோல்ம்ஸ் தேவையில்லை.'
'கான்ஸ்டபில் கண்ணாயிரம் போதும்!'
----x----
Sema story sir...
ReplyDeleteNo words to wish!
ReplyDeleteI wanted that twist!
ReplyDeleteஎன் மனமார்ந்த வாழ்த்துக்கள்! சத்தியமா உங்களுக்கு இல்ல! கான்ஸ்டேபல் கண்ணயிரத்துக்கு! Great Brain!
Sherlock hasn't ceased to abandon U in ur real life...Could sense his deep impact...
ReplyDeleteAMUSING script with SPELLBINDING own account of instinct...