Monday, December 17, 2012

பிடித்ததும்... படித்ததும்...


பிடித்ததும்... படித்ததும்...  
        
       கார்நேசன் முடிவெடுத்துவிட்டான். ஒரு மாதம். அதாவது இன்றிலிருந்து சரியாக 30 நாட்கள். நினைக்கும் போதே சிறு தடுமாற்றம். நிறைவேற்றிவிடுவதற்கு சாத்தியக்கூறுகள் உண்டா என்ற மனப்போராட்டம்.

              இந்த கசப்பான முடிவின் பின்னணியில் சில பேர்வழிகளின் வசைபாடல்களும் கோரத்தாண்டவமும் மட்டுமே அணிவகுத்து நின்றது. இவையன்றி வேறெந்தவொரு நியாயமான காரணமும் வலு சேர்க்கவில்லை.

             'பழகப் பழக பாலும் புளிக்கும்' என்ற கூற்று பழமொழி என்பதையும் தாண்டி பழைய மொழி என்றாகிவிட்ட இக்காலத்தில் அளவுக்கதிகமாக பழகியதனால் தான் என்னவோ கூடுதலாக பிடித்திருந்தது. மறப்பதற்கு மனமில்லை. பிடித்ததை நினைக்காமல், பார்காமலிருப்பது எளிதல்லவே. இருந்தும் ஒரு முயற்சி.

                 துவக்கத்தில் பெரிய மாற்றம் நேருமென்ற உணர்வேதுமில்லை. போகப் போக  ஊனின்றி உறக்கமின்றி இடைவெளி குறைந்து இணக்கம் மிகுந்தது. விளக்கை அணைக்காமல் கண் அயர்ந்த நாட்களில் கனவில் தொடர்ந்த கதைகளும் உண்டு. நடு இரவு கடந்து அதிகாலை வரை நீண்ட பரிமாற்றங்களில் பல விடியல் பொழுதுகள் புலர்ந்ததும் உண்டு .

                   வீட்டிலுள்ளவர்களின் அர்ச்சனைகளும் நண்பர்களின் கேலியும் கிண்டலும் நாளுக்கு நாள் அதிகரித்தது. அவற்றையெல்லாம் ஒரு பொருட்டாக கூட மதிக்க இசையவில்லை. பாவம்! அவர்களுக்கு எப்படி புரியும், அனுபவித்து உணர்ந்தவர்களுக்கு மட்டுமே புலப்படும் சுகம் அது.

             ஒரு நாளைக்கு 24 மணி நேரமென்பது அனைவருக்கும் பொதுவான நியதி. மணித்துளிகள் கரைந்தோடுவதும், சற்று அதிகமாக இருந்திருக்கலாமென தோன்றுவதும் இதிலகப்பட்டவர்களுக்கான இயல்பே. தடை செய்ததன் விளைவு, நேர்மாறாக இன்று ஒவ்வொரு நொடியும் ஒரு யுகம்போல கழிந்தது.

             
                எள்ளளவும் கவனம் சிதறாமல்,மற்ற எதிலும் கவனமில்லாமல் சென்று கொண்டிருந்த பிரகாசமான  பாதை திடீரென்று இருட்டடித்தது. சில சமயங்களில், 'உன் வாழ்வு உன் கையில்' என்பதை கடைபிடிப்பவர்களை விட 'உன் வாழ்வு முடிந்தவரை பிறருக்கு சந்தோஷத்தை கொடுத்து சங்கடத்தை தவிர்க்குமானால் அதுவே சிறந்த அறம்' என்பதை பின்பற்ற வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறவர்களே அதிகம். அதிலிருந்து தானும் தப்பவில்லை எனினும் இந்த முயற்சி மறுப்பதற்கோ மறப்பதற்கோ அன்று, ஞாபகத்தில் நிலைநிறுத்திக் கொள்ளவும் பிறருக்கு புரிய வைக்கவும் கிடைத்த 
ஆயுதமென நினைத்தான் கார்நேசன் .

           
         நிரந்தரமாக இணைந்திருக்க தற்காலிகமான சிறு பிரிவு அவசியமென்பதை உணர்ந்தவனாய் சிலர் தெரிந்தோ தெரியாமலோ தடைவிதித்தது தனக்கு செய்த நன்மையே என்றும் அத்தடையை துவம்சம் செய்து முன்னேறுவதற்காகவும்  நம்பிக்கையோடு காத்திருந்தான்.
 
             காத்திருப்பு வீண்போகவில்லை. இதோ 15 நாட்களுக்குப் பிறகு வந்தது ஆச்சரியம் கலந்த அதிர்ஷ்டம். அவன் பெயரில் இரண்டு பார்சல்கள். ஒன்று லேசாகவும் மற்றொன்று கனமாகவும் இருந்தது.

            முதலில் லேசான பார்சலை பிரித்தபோது கனமான மகிழ்ச்சி மனதில் ஒட்டிக்கொண்டது. அவனது  கனவு வேலைக்கான ஆர்டர் அது.

            கனமான கவரில் இருந்த விஷயம் அவன் மனதை லேசாக்கியது. 'பிடித்ததையும் படித்ததையும் மறந்துவிடாதே' என்ற குறிப்போடு வந்திருந்தது புத்தகப் பார்சல். என்றோ ஒரு நாள் சிறுகதை போட்டிக்காக 'புத்தகக் காதல்' என்ற தலைப்பில் தன் அனுபவத்தை எழுதியதற்காக  இன்று தக்க நேரத்தில் கையில் கிடைத்தது  பரிசு.

           தனக்கு முற்றுக்கட்டை போட்டவர்களின் முகத்துக்கு நேராக வேலைக்கான ஆர்டரை கொடுத்துவிட்டு, அரை மாதமாக நிறுத்தி வைத்திருந்த புத்தகங்களுடனான சிநேகிதத்தை புதுப்பிக்க முனைந்தான்.
                   
             புத்தகத்தின் மேல்புறத்தில் சிறிய வண்ணத் தாளில் எழுதியிருந்த குறிப்பு கார்நேசனின்  வாழ்க்கையை புதிய பரிமாணத்தில் வண்ணமயமாக மாற்றக் காத்திருந்தது. மீண்டும் ஒரு முறை அக்குறிப்பை படித்தான் - 'பிடித்ததையும் படித்ததையும் மறந்துவிடாதே'.அது அவனது மூளையில் பலமுறை எதிரொலித்தது.  

!!!---!!!

1 comment:

  1. சிலர் ரசித்தாலும்
    சிலர் சிரித்தாலும்
    மனைவியை போல்
    மையம் கொண்ட என்
    கவிதை எழுதும் பழக்கத்தை.....
    மீண்டும் உசிப்பிவிட்ட
    சிறு க(வி)தை ...

    ReplyDelete