Wednesday, August 8, 2012

THODARUM



தொடரும்

நான் எனது போலீஸ் படையுடன் அந்த வீட்டை சுற்றி வளைத்துவிட்டேன். அந்த சரியான தருணத்திற்காக காத்திருந்தேன்.

நான் - பாஸ்கரன் எஸ்.ஐ, கிரைம் பிரான்ச். கடந்த மூன்று மாதங்களை முழுக்கமுழுக்க செலவு செய்த்தது, சுந்தரத்தை பிடிப்பதற்காக மட்டும்தான். பல உளவுப் படைகளின் உதவிகளைக்கொண்டு இறுதியாக, நாகராஜன் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான சுந்தரம் பதுங்கியிருக்கும் இடமென கிடைத்த தகவலின் பேரில் இரவு மூன்று மணிக்கு, முப்பத்து எட்டு பேர் கொண்ட போலீஸ் படையுடன் அந்த ஒற்றை வீட்டை சுற்றிவளைத்து, கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த வீட்டின் கதவை தகர்த்து உள்ளே சென்று பார்த்தபோது.. எனக்கு கிடைத்தது சில காலாவதியான செய்தித்தாள்களும், அவசரத்தில் அவன் விட்டுச்சென்ற அழுக்குத் துணிகளும், நிறைய ஏமாற்றம் மட்டும் தான்.

நிச்சயம் சுந்தரம் இங்கிருந்திருக்கவேண்டும். கொஞ்சம் முன்னம் வந்திருந்தால் சிக்கியிருப்பான். முடிவுக்கு வந்துவிட்டதாக நினைத்த இந்த 'நாகராஜன் கொலை' அத்யாயம் மீண்டும் தொடர்வதைக் கண்டு என்னை நானே நொந்துகொண்டேன்.

அன்று இரவு, என் வீட்டில் உறக்கம்கொள்ளாமல் பல சிந்தனைகளில் நான் ஆழ்ந்தேன்.

நாகராஜன் யார்?

தென்காசி மாவட்டம் வள்ளம், அவன் சொந்த ஊர். ஊர் டிரஸ்டியின் இரண்டாவது மகன். சௌகரியாமன இளமைப்பருவ வாழ்க்கை. திடீர் என்று நிகழ்ந்த அரசியல் தகராறில் மாஜி எம்.எல்.ஏ.கண்ண்ப்பமுதலியார், நாகராஜனின் அப்பா மற்றும் அண்ணனை குத்திக் கொல்ல, தற்காப்புக்காக கண்ணப்பனின் எதிர் அணியான ராமலிங்கத்திடம் தஞ்சம் அடைந்தான். கண்ணப்பனை எப்படியேனும் கொன்றுதீர்ப்பேன் என்று பலர் முன்னிலையில் சூளுரைத்தான்.

இருபது ஆண்டுகளில், ராமலிங்கத்தின் மறைவிற்குப் பிறகு, தனக்கென்று ஒரு படை திரட்டிக்கொண்டு கட்டப்பஞ்சாயத்து, ஜாதிக்கட்சியென வாழ்வை ஓட்டிக்கொண்டிருந்த நாகராஜன், இரண்டு ஆண்டுக்கு முன் கண்ணப்பனை கொலைசெய்யும் முயற்ச்சியில் இறங்கி, கண்ணப்பன் சென்ற காரில் குண்டு வீசி தன் தந்தையையும் அண்ணனையும் கொன்றதற்காக பழி தீர்த்துக்கொண்டான்.

பகைதீர்த்த உற்சாகத்தில் கம்பீரமாக சுற்றித்திரிந்த நாகராஜன், மூன்று மாதத்திற்கு முன், அவன் வீட்டிலேயே, அதிகாலை 5.30 மணிக்கு ஒரு முகம் தெரியாத ஆசாமியால் சுட்டுக்கொல்லப்பட்டான்.

இது ஒரு சராசரி ரௌடியின் வாழ்கை வரலாறாக அன்றே முடிந்திருந்தால் எனக்கு இன்று எந்த சங்கடமும் இருந்திருக்காது.

நாகராஜன் இறந்த மூன்றாவது நாள், அவனது ஜாதிகட்சியினர், சுட்டவனை கோட்சே'வாகவும், நாகராஜனை மகாத்மா'வாகவும் உருவேற்றி, மாநிலம் தழுவிய போராட்டம் மேற்கொண்டு, அன்று விழுந்தது என் தலையில் இடி!

'போலீஸ் தூங்குகிறதா?' 'தலித்து மக்களுக்கு நீதி வேண்டாமா?' போன்ற போஸ்டர்கள் எனக்கு அளிக்கப்பட்ட கடமைக்கு அழுத்தம் சேர்த்தது. இது போன்று அழுத்தம் அதிகாமான நேரங்களில் நான் சந்திக்கும் ஒரே நபர், வக்கீல் கணேஷ்.

கணேஷ், “ஒவ்வொரு போலீஸ்கும் ஒவ்வொரு கேஸ் லைஃப் டைம் கேஸா அமையும். இது உனக்கு. எல்லா கார்ணர்ல இருந்தும் டார்கெட் பண்ணு. என்னால முடிஞ்ச உதவிய நான் பண்றேன்”

கணேஷின் வார்த்தைகள் எனக்கு புது தெம்பை தந்தது. இந்த வழக்கில் என்னை முழுவதுமாக செலுத்திக்கொண்டேன். ஆரம்ப நாட்களில் பலர் என் சந்தேக வட்டத்தினுள் இருந்தனர். கொஞ்சம் கொஞ்சமாக எல்லோரும் விலக, மிச்சம் இருந்தது சுந்தரம் மட்டும் தான்.

சுந்தரம் - கண்ணப்பமுதலியாரின் வளர்ப்பு மகன். ஆழமாக சென்று பார்த்ததில், கண்ணப்பனுக்கும் அவன் தோட்டத்தில் வேலை பார்க்கும் பெண்ணிற்கும் பிறந்தவன். நாகராஜனை கொலை செய்ய சுந்தரத்திற்கு போதிய காரணம் இருக்கிறது. பழைய பகை. தன் தந்தையை கொன்றவனை தானே கொல்லவேண்டும். பழிக்குப்பழி. செய்துமுடித்தான்.

அன்று ஆரம்பித்தது இந்த வேட்டை. சுந்தரம் பற்றிய அனைத்து தகவல்களும் சேகரித்தேன். தன் இரையை குறிவைத்து, மூச்சுச் சத்தம் கூட வெளிவராமல் பதுங்கியிருக்கும் புலியைப்போல் அவன் மறைந்திருந்த வீட்டை நெருங்கினேன். எங்கோ தப்பு நடந்திருக்க வேண்டும். இந்த முறையும் கோட்டை விட்டாச்சு. ஓசி குவாட்டருக்காக நாட்டையே விற்றுவிடும் சில போலீஸ்காரர்கள் இருக்கும் வரையில் இது போன்ற ஏமாற்றங்களை ஜீரனித்துக்கொள்ளத்தான்வேண்டும்.

அதன் பிறகு மீண்டும் ஒரு மாதம் முயற்சித்தேன். இந்த முறை நிச்சயம் சுந்தரத்தை பிடித்துவிடலாம் என்று எண்ணிய மாத்திரத்தில் அறிவிக்கப்பட்டது தேர்தல் தேதி.

சரியாக நாற்பது நாள். அத்தனை கேஸ்களையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு, முழுக்கமுழுக்க தேர்தல் வேலைகளில் இறங்க வேண்டி மேலிடத்து உத்தரவு. இந்த நாட்களில் வக்கீல் கணேஷும் கூட ஏதோ நடிகையின் கேஸ் விஷயமாக லண்டன் சென்றுவிட்டார்.

அதற்குள் அத்தனை அரசியல் தலைவர்களும் குலுக்கிய சீட்டுக்கட்டு கார்டுகளைப்போல் ஒவ்வொரு அணியில் கொள்கை பேதமின்றி இணைந்துகொண்டனர்.

என்னை வேலூர் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு அதிகாரியாக நியமித்திருந்தனர். ஏறக்குறைய அத்தனை மாவட்டங்களிலும் தேர்தல் முடிந்து, வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி, எதிர்பார்த்தது போல் எதிர்கட்சி வென்று, ஆளுங்கட்சி தோற்று..அனைத்தும் முடிந்து, ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தேன்.

சரியாக இரண்டு மாதங்களுக்குப் பிறகு சுந்தரத்தை தூசி தட்டினேன்.

என் வாக்கி-டாக்கி கீரிட்டது. என் மாவட்ட எம்.எல்.ஏ அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கச் செல்வதாகவும், அவருக்கு பந்தோபஸ்துக்கு நான் செல்லவேண்டும் என்று கட்டளை பிறப்பித்தது. சுந்தரத்தை மேசைமேல் வைத்துவிட்டு அண்ணா சாலைநோக்கிச் சென்றேன்.

எதிர்பார்த்தபடியே சரியாக ஒன்றரை மணி நேரம் தாமதமாக, பெருத்த ஆராவாரத்துடன், ஆளுங்கட்சி கொடியேந்தி ஒரு பெருங்க்கூட்டம் வந்தது. எம்.எல்.ஏ'வும், கவுன்சிலர்களும், இன்ன பதவி என்று சொல்லமுடியாத எம்.எல்.ஏ'வுடன் கோஷமிட்டு வந்தோரும் சிலைக்கு மாலை அணிவிக்க, நான் கொஞ்சமும் எதிர்பாராத அதிர்ச்சி என்னை தாக்கியது. ஏழாவதாக மாலையிட்டது சந்தேகமேயில்லாமல் நான் தேடிக்கொண்டிருக்கும் சுந்தரம்.

நடப்பதை என்னால் நம்பமுடியவில்லை. உடனடியாக ஸ்டேசன் சென்று மற்ற அதிகாரிகளை விசாரித்ததில், அவன் நாற்பத்து நாலாவது வார்டு கவுன்சிலர் ஆனது தெரியவந்தது. இது பற்றி மேலிடத்தில் அணுகியபோது அவன் ஆளுங்கட்சி எனவும், அவன் மீது உள்ள வழக்கை இப்போதைக்கு தொடவேண்டாம் எனவும் உத்தரவிட்டனர்.

இரண்டு நாட்கள் கழிந்தது. இன்னும் என் கோபம் குறையவில்லை. ஸ்டேசனில் எல்லோரும் என்னைப் பார்த்து நகைப்பது போன்று தோன்றியது. என்னால் ஸ்டேசனில் இருக்கமுடியவில்லை. வெளியே வந்து என் ஜீப்பில் அமர்ந்துகொண்டேன். வக்கீல் கணேஷ் ஊர் திரும்பியது ஞாபகம் வந்தது.


நான், “என்னமோ என் லைஃப் டைம் கேஸ்'னு சொன்னீங்களே. எப்படி முடிஞ்சு போச்சு பாத்தீங்களா? இந்த பேப்பர பாருங்க. ஃபோட்டோ போட்டிருக்கான். நான் சுந்தரத்துக்கு பாதுக்காப்பு கொடுத்துட்டிருக்கேன்... ச்சே... இந்த காக்கிச்சட்டைய போடறதுக்கே உடம்பெல்லாம் கூசுதுங்க. பேசாம வேலைவேண்டாம்னு எழுதிகொடுத்திட்டு எதாவாது பேங்க் வேலைக்கு அப்ளைபண்லாம்னு தோனுது.”

இத்தனையும் அமைதியாக கேட்டுக்கொண்டு சின்ன புன்னகையுடன் “கூல் டவுன் பாஸ்கர்”, கணேஷ்.

ஐம் கூல் கணேஷ். ஆனால்... என்ன இருந்தாலும் ஜஸ்டிஸ்'னு ஒன்னு இல்லாம போயிடுச்சேன்னுதான் வருத்தமா இருக்கு. அப்பட்டமா ஒரு கொலை செஞ்சவன் இப்ப நிம்மதியா சுத்திட்டு இருக்கானே. அவன யாருதான் தண்டிக்கிறது?”

கணேஷ் அதே புன்னகையை கொஞ்சம் பெரிதாக்கிக்கொண்டு தன் மேசைமேல் இருந்த நாளிதழை பாஸ்கரிடம் நீட்டினான்.

அதில் மாவட்டச் செய்தியில் மத்தியில் வாசித்தான். ' டாஸ்மாக் ஊழியர் படுகாயம்! குடிபோதையில் தாக்கிய இளைஞர் கைது!'

நான்,”இதுக்கும் எனக்கும் என்ன சம்மந்தம்?”

“அந்த குடிபோதையில் அடிச்சவன் வேற யாருமில்லை. நாகராஜனோட மகன். கவலைபடாம நீ வீட்டுக்குப் போ. உன் கேஸுக்கான ஜுட்ஜ்மென்டை இவன் பார்த்துப்பான். பழிக்குப்பழி தொடரும்!



----தொடரும்----




1 comment:

  1. கொலைக்களத்தை பற்றிய கதைக்களத்தின் தெளிவான வரிகள் சாடியிருப்பது தெளிவற்ற மனநிலையிலிருக்கும் மனிதர்களின் வெறிச்செயலை... ஜட்ஜ்மென்ட், ஜஸ்டிஸ் பற்றி எல்லாம் யோசிக்க வேண்டிய அவலம் இப்போது நமக்கே!

    ReplyDelete