Saturday, August 27, 2011

அப்பா

அப்பா 

னக்கு எப்போதுமே என் அப்பாவை பிடிக்கும் தான். ஆனால் அதை வெளிபடுத்துவதற்கான நேரம் தான் கடைசி வரை அமையாமல் போய்விட்டது.

இன்னும் சொல்லப்போனால் அவர் மறைந்த பின் தான் அவரை நான் எவ்வளவு நேசித்தேன் என்பது எனக்கே தெரிந்தது. அதுவும் பிரசவத்துக்காக என் மனைவியை அவள் அம்மா வீட்டிற்கு அனுப்பிவிட்டு தனிமையில் தவிக்கும் இந்நாட்களில் தான் என் அப்பாவின் நினைவுகள் என்னை அதிகம் சூழ்கின்றது.

சராசரியான தந்தை - மகன் உறவு எங்களுக்குள் அமையவில்லை. காரணம்?

நான் சராசரியான மகன் தான். ஆனால் என் அப்பா சராசரியான தந்தை இல்லை.

ஒரு மனிதன் ஒரு குறிப்பிட்ட வயது வரைதான் அறிவை தேடி போகவேண்டும். அதன் பிறகு அவனுக்கான சமுதாய பொறுப்புகள் அவனுக்கு வந்து விடும். ஆனால் என் அப்பாவின் அறிவுத்தேடலே என் அப்பாவை என்னிடம் இருந்து, இந்த உலகத்திலிருந்தே பிரித்து விட்டது. அதுவும் அத்தனை வித்தியாசமான தேடல்!

அவர் கேட்டது - 'மரணத்திற்குப் பின் என்ன?'  'மனிதன் இறந்த பிறகு மீண்டும் உயிர்த்தெழ முடியுமா?'  'மறுஜென்மம் உண்டா?'.

இந்த கேள்விகளை புத்தகம் அளவிலே அவர் நிறுத்தியிருந்தால் அவர் நன்றாக இருந்திருப்பார். ஆனால் அவர் உண்மையை தேடி பல எல்லைகளை தாண்டிச் சென்றுவிட்டார்.

ஊரில் எங்கு இறங்கல் செய்தி வந்தாலும், கேமிராவையும் சவுண்டு ரெகார்டரையும் எடுத்திக்கொண்டு சென்றுவிடுவார்.

ஊருக்குள் கொஞ்சம் கொஞ்சமாக அவரின் பெயர் கெட்டது. சில நாட்களிலேயே ஊர் அவருக்கு பைத்தியக்காரன் பட்டம் கட்டிவிட்டது. ஆனால் அப்போதும் அவர் தன்னை நிறுத்திக்கொள்ளவில்லை.

ஒரு நாள் நள்ளிரவில் அவரை வீட்டில் காணாமல் தேடி, இறுதியில் சுடுகாட்டில் கண்டபோது தான் எனக்கே கொஞ்சம் பயம் வந்தது. இந்த அகோரமான தேடலை உடனடியாக நிறுத்திக்கொள்ளும்படி நான் எவ்வளவு சொல்லியும் அவர் கேட்கவில்லை.

ஒரு நாள் எங்களுக்குள் சண்டை வழுத்தது. அதன் காரணமாக நான் என் மனைவியுடன் வீட்டை விட்டு வெளியேறினேன். அங்கு நின்றது தான எங்கள் உறவும்.

அப்பா மறைந்து ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்ட நிலையில் அவரின் நினைவுகள் நாளுக்கு நாள் அதிகம் ஆகிக்கொண்டே போனது. கனவுகளும் கூட அவர் அவருடை அறையிலிருந்து அழைப்பதைப்போல் அடிக்கடி வந்தது. இறுதியாக ஒரு நாள் அவரின் பூட்டிய அறையை திறந்தேன்.

தூசி அடர்ந்திருந்த அறையில் எங்கு பார்த்தாலும் புத்தகங்கள் தான். அத்தனையிலும் ஏதோ ஒரு விதத்தில் மரணம் இருந்தது. அவருடைய மேசைமேல் மஞ்சள், நீலம், ரத்தச்சிவப்பு என பல நிறங்களில் காய்ந்த ரசாயனங்களும் கண்ணாடிக் கோப்பகளும்.

என் அப்பா ஒருமுறை என்னிடம் கேட்டார். 'நம்மை விட அறிவியலிலும் கலாச்சாரத்திலும் பல ஆண்டுகளுக்கு முன்னமே முன்னேறிய பண்டைய எகிப்தில் ஏன் இறந்த பிணங்களை பதப்படுத்தி பாதுகாத்தனர்?'

சரியான பதில் தெரியவில்லையென்றாலும் அது மூடநம்பிக்கைகளின் உச்சக் கட்டமென்றே புரிந்தது.

அவர் அலமாரியிலிருந்த புத்தகங்களின் சில அட்டைப்டங்கள் என்னை ஈர்த்தது. நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் ஒவ்வொரு புத்தகமாக படித்தேன். அத்தனையும் பிதற்றல்கள். சாட்சியங்கள் ஏதும் இல்லாத புலம்பல்கள்.

பல புத்தகங்களில் விஞ்ஞானம் கலந்த விக்கிரமாதித்தன் கதைகள். இந்த கதைகளெல்லாம் என் அப்பாவை எப்படி இத்தனைதூரம் கவர்ந்திருக்க முடியும் என்று வியந்துகொண்டேன்.

நாளாக நாளாக அந்த புத்தகங்கள் மூலம் என் அப்பா என்னுடன் உறையாடுவதுபோல் உணர்ந்தேன். முட்டாள்தனம் என்று நினைத்தாலும், அந்த புத்தகங்களில் ஏதோ ஒரு வகையில் ஈர்க்கப்பட்டேன். கொஞ்சம் கொஞ்சமாக, அந்த புத்தகங்கள் மூலம், மரணத்தில் ஒரு வசீகரம் இருப்பதாய் உணர்ந்தேன். என் அப்பா என்னிடம் கேட்ட பல கேள்விகளுக்கு பதில் கிடைக்கத் தொடங்கியது.

அந்த புத்தகங்கள் அனைத்தும் கூறியது, 'மறைந்த உயிர்கள் இந்த உலகத்தில் மீண்டும் உயிர்க்கும்' என்பதுதான். ஆனால் ஒரு புத்தகத்தில் உள்ள ஒரு குறிப்பு என்னை அதிகம் கவர்ந்தது.

அது கூறியது, 'பண்டைய சீன அரசாட்சியான 'ஹன்' அரச காலத்தின் மன்னன் ஒருவன் தன் லட்சியத்தை அடையும் முன் தனக்கு முதுமை வந்துவிட்டது என்று சில மூலிகைகளை அரைத்துக் குடித்துவிட்டு இறந்துவிட்டான். பின் அவன் தன் மரணத்தறுவாயில் கூறியது போலவே அதே உடல் அம்சங்களுடன் மீண்டும் பிறந்து அந்த இலட்சியத்தை நிறைவேற்றினான்' என்றும் இருந்தது.

இதில் எனக்கு அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், அவன் இறந்து கிடந்த நிலை.

கண்கள் இரண்டும் சிவந்து , நாசிதுவாரங்களில் வெண்மை படிந்து, நாக்கு மற்றும் கால் நகங்கள் நீலமாய், என அப்படியே என் அப்பாவின் மரண நிலை!!

எனக்கு நடந்தது புரிந்ததுவிட்டது. உடல் வியர்த்தது. என் அப்பா எத்தனை பெரிய காரியத்தை செய்திருக்கிறார்.

இது உண்மையா?

உண்மையாக இருந்தால்?

நினைக்கும் போதே எனக்கு நெஞ்சு படபடத்தது. என் அப்பாவும் மீண்டும் உயிர்த்தெழுவாரா? அந்த புத்தகக் குறிப்பின் அடியில் என் அப்பா கைபட எழுதிய ஒரு வாசகம் என்னை மேலும் நிலைகுழையச் செய்தது.

'இதை நீ படிப்பாய் என்று எனக்கு தெரியும். அதனால் தான் நான் இந்த முடிவை எடுக்கிறேன். ஆனால் இதில் உன் உதவி எனக்கு தேவை. நான் என் உடலைப் பிரிவது குரு பௌர்ணமியில். அதிலிருந்து சரியாக பதினாலாவது பௌர்ணமியின் போது எனது உடலை தோண்டி எடுத்து , எனது மண்டை ஓட்டை மட்டும் சரியாக இரவு 1.25 மணிக்கு உடைத்து விட வேண்டும். இது உன் தந்தையாக நான் கேட்கும் ஒரே வேண்டுகோள். மறந்துவிடாதே!' 

என்னால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நடுங்கிய கைகளுடன் கேலண்டரை எடுத்துப் பார்தேன். ஆச்சிரியம் மீது ஆச்சரியம்! அப்பா குறிப்பிட்ட பதினாலாவது பௌர்ணமி நாளை மறுநாள்.

என் அப்பாவின் நினைவுகளும், அவர் தோன்றிய கனவும், நான் அவர் அறையை திறந்ததும், அவர் புத்தகங்களை படித்ததும், அவர் எழுதிய குறிப்பை சரியான நேரத்தில் படித்ததையும் இயல்பாக, எதேர்ச்சியாக நடந்த நிகழ்வாக என்னால் எடுத்துக் கொள்ள முடியவில்லை.

இத்தனை நாட்கள் என் அப்பா என்னுடன் தொடர்புகொண்டிருந்தாரா?

இதை இதற்கு மேலும் லேசாக விட்டுவிடக் கூடாது.

எனக்கு என் அப்பா வேண்டும். எப்படியேனும் வேண்டும்.

அந்த புத்தகத்தில் இருந்த அத்தனை குறிப்புகளையும் சேகரித்தேன். அவர் குறிப்பிட்டிருந்த அந்த இரவும் வந்தது.

பெளர்ணமி நிலவு உச்சி வானை அடையும் வரை காத்திருந்து பின் என் அப்பாவின் கல்லறையை தோண்ட ஆரம்பித்தேன். அந்த இரவில் நிலவு வெளிச்சத்தில் கல்லறைகள் அனைத்தும் வெள்ளி முலாம் பூசியது போல் இருந்தது. அத்தனை குளிரிலும், என் உடலை வேர்வை நனைத்தது. மனதிற்குள் அப்பா அப்பா என்று சொல்லிக்கொண்டே தோண்டினேன்.

அந்த அழுகிய நாற்றத்தை கூட நான் பொருட்படுத்தாது தோண்டி முடித்தேன். இறுதியில் என் அப்பாவின் மண்டை ஓட்டினை வெளியே எடுத்து சரியாக 1.25 மணியாகும் வரை காத்திருந்தேன்.

இரவை உணரவில்லை. அதன் குளிரை உணரவில்லை. இந்த உலகம் எதுவும் உணராமல் ஒரு கையில் சுத்தியலுடன் என் அப்பாவின் மண்டை ஓட்டை மட்டும் பார்த்துக்கொண்டிருந்தேன். சரியாக 1.25 மணியாக இன்னும் இருபது வினாடிகள்தான் இருந்தது.

உள்ளங்கையில் இடைவிடாமல் வியர்த்தது. மணி சரியாக 1.25ஐ அடிக்க என் சுத்தியல் என் அப்பாவின் மண்டை ஓட்டை தகர்த்தது.

வேலை முடிந்ததும் அங்கிருந்து விரைந்து, வீட்டுக்கு வந்து போர்வைக்குள் ஒளிந்துகொண்டேன். நான் செய்த செயலின் தாக்கம் இன்னும் என் மனதை விட்டு துளியும் விலகவில்லை.

'என் அப்பா என்னை தேடி வரப்போகிறாரா?' என் அறையில் மாட்டியிருந்த அவரது ஃபோட்டோவில் அவர் என்னைப் பார்த்து சிரித்தார்.

எனக்கு இதயம் கனமாக தெரிந்தது. பல நாள் தண்ணீர் அருந்தாததைப் போல் தாகம் எடுத்தது. தண்ணீர் குடிக்க நான் அடுத்த அறைக்குச் செல்லும் போது டெலிபோன் அலறியது. சில வினாடிகள் என் இதயம் முழுவதுமாக செயலிழந்து விட்டது.

யார் ஃபோன் செய்வது? அப்பாவா?

நடுங்கிய கையில் ரிசீவரை எடுத்த எனக்கு வாயிலிருந்து வார்த்தை வெளிவரவில்லை.

மறுமுனையிலிருந்து, “ஹலோ, ஜீவா தம்பியா? நான் லட்சுமி பேசறேனுங்க” என்று என் வேலைக்காரியின் குரல் கேட்டது.

இப்போதும் என்னால் வார்த்தைகளை வெளியிடமுடியவில்லை.

லட்சுமி, “தம்பி, நம்ம அம்மாவுக்கு ஆண் குழந்தை பிறந்திருச்சுங்க. மூக்குமுழியெல்லாம் அப்படியே நம்ம அய்யாவ உரிச்சு வச்சிருக்குங்க” என்றாள்.

முதல் முறை என் இதழ்களிலிருந்து உடைந்த வார்த்தை,

"அப்பா"



2 comments:

  1. என்றோ நான் அழைத்த ஞாபகம்!

    மறந்த சொல்லை மீண்டும் உச்சரித்த மகிழ்ச்சி!

    அப்பா!

    The Best! The Hero!

    ReplyDelete
  2. A story with unusual perspective yet tries to answer the common question of people's search about life after death in a profound manner against superstition...

    Serious concept presented carefully which has to be dealt with keen understanding...

    ReplyDelete