Thursday, July 21, 2011

தங்கச்சிலுவை !

தங்கச்சிலுவை !

காய்ந்த ரத்தம், கால்களைத் தொலைத்த செருப்புகள், விட்டுப்போன வெட்டருவாள் வேல்கம்பு என்று அந்த தெரு, முந்தைய இரவு நடந்த கலவரத்திற்கு ஆதாரங்களை சேர்த்துவைத்திருந்தது.

ஒரு மாதம் முன்பு, அந்தோனியார் ஆலயத்தில், அப்போதிருந்த தேக்குமரச் சிலுவைக்கு பதிலாக வரும் தேர் திருவிழாவில் தங்கச் சிலுவை ஒன்றை செய்து, அதை ஊர்வளத்தில் கொண்டுசெல்லலாம் என முடிவெடுக்கப்பட்டு, அதற்காக பணவசூலில் ஈடுபட மெத்தப்பட்டி ஊர் தலைவன் ஃபெர்னாண்டசிடம் பொறுப்பை ஒப்படைத்தார் ஃபாதர் அருள்துரை.

அப்போதிருந்தே மெத்தப்பட்டி ஊர் மக்களுக்கும், கீழத்தெரு மக்களுக்கும் வாக்குவாதம் ஆரம்பித்தது.

தேக்குமரச் சிலுவை போதும் என்றனர் கீழத்தெரு வாசிகள்.

அதெப்படி? மற்ற மதங்களைப்போல் நமது திருவிழாக்களையும் விமர்சையாக கொண்டாவேண்டாமா? நம் கடவுளின் பெருமையை இந்த ஊரறிய செய்யவேண்டாமா என்று கீழத்தெரு மக்களின் வாயடைத்தனர் மெத்தப்பட்டி வாசிகள்.

ஒரு வழியாக அப்போது சமாதானமாகி, கீழத்தெரு மக்களும் தங்கச் சிலுவைக்கான பணவசூலிற்கு பங்களித்தனர்.

தங்களுடை சுயதேவைகளை பொருட்படுத்தாது, உழைக்கும் பத்தையெல்லாம் ஃபெர்னாண்டசிற்கு அளித்தனர். 

வரப்போகும் தங்கச்சிலுவையால் தங்கள் ஊருக்கும், ஊரின் ஆலயத்திற்கும் கிடைக்கப்போகும் பேரையும் புகழையும் எண்ணி,எப்போதும் இல்லாத வண்ணம், அவர்கள் தேர் திருவிழாவையும், தங்கச்சிலுவையையும் எதிர்பார்த்து இருந்தனர்.

ஆனால் தேர் திருவிழாவில் தங்கச் சிலுவைக்குப் பதிலாக பழைய தேக்குமரச் சிலுவையை பார்த்ததும், கீழத்தெரு மக்களுக்கு கோபம் தலைக்கேறி, என்னதான் ஃபாதரும் ஃபெர்னாண்டசும் கிடைத்த பணம் போதவில்லையென்று காரணம் சொன்னாலும், அதையேற்காமல், வாக்குவாதத்தில் இறங்கி, கைகலப்பு ஏற்பட்டு, இறுதியில் ஏழு பேர் உயிரிழந்து, ஐம்பத்து ஆறு பேர் படுகாயம் ஆகும் வரை தொடர்ந்தது அந்த கலவரம்.

இப்போது அந்த தெருவில் அதிக மக்கள் நடமாட்டம் இல்லை. ஊரில் பாதி பேர் மருத்துவமனையிலும், மீதி பேர் காவல்நிலையத்திலும் உள்ளனர்.

நேற்று இரவு கலவரத்தின் தாக்கம் மட்டும் இன்னும் மிச்சம் இருந்தது. தெருவின் ஒரு மூலையில் உடைந்த கண்ணாடியும், உடைந்த விளக்குடனும் தேர் கேட்பாரற்று நின்றுகொண்டிருந்தது.

அந்த வழியே தனது எட்டு வயது மகனுடன் வந்த குயவன் ஒருவன், அங்கு நடந்த கலவரத்தைப் பற்றி அங்கிருந்தவர்களிடம் விசாரித்துக்கொண்டிருந்தான்.

அப்பொது அங்குமிங்கும் சுற்றி பார்த்துக்கொண்டிருந்த அந்த குயவனின் மகன், கீழே இருந்து ஒரு மரத்துண்டை எடுத்து அவன் தந்தையிடம் காட்டினான்.

அது கர்த்தருடைய சிலுவையின் உடைந்த பாகமாக இருக்கலாம்!, என்று அவன் தந்தை கூறியவுடன், அந்த மரத்துண்டை தூசித்தட்டி, தன் சொக்காயில் துடைத்து, தன் வீட்டிலுள்ள சாமியறைக்கு எடுத்துச்சென்றான், அந்த சிறுவன்.



அந்த உடைந்த மரத்துண்டு, அந்த சிறுவனின் பக்திக்கும், கடவுள் வழிபாட்டிற்கும் போதுமானதாக இருந்தது!

----x----

1 comment:

  1. சக மனிதனின் மேல் அக்கறை இல்லாத மனிதன்
    கற்பனையில் வாழும் இறைவன் - தன்
    மேல் அக்கறை காட்ட நினைப்பது
    எங்கோ நாம் பெற்ற சாபம்!

    ReplyDelete