Monday, June 27, 2011

உலகக்கோப்பை

உலகக்கோப்பை 

இந்தியா வெல்ல கடைசி ஆறு பந்துகளில் 21 ரன்கள் தேவை.

ராகுல், இந்திய கிரிக்கெட் அணியின் தீவிர ரசிகன். அவனுக்கு இந்த உலக்கோப்பையின் இறுதியாட்டம் மிகமுக்கியமானது.

அடுத்த ஆறு பந்துகளில் ஒளிந்திருக்கும் ரகசியம் அவன் நெஞ்சுக்குள் ஏதேதோ செய்தது. 'இந்தியா வென்றாகவேண்டும்' என்று அவன் மூளைக்குள் யாரோ ஒலியெழுப்பியதைப்போல் உணர்ந்தான்.

ராகுல் எதிர்பார்த்தது போலவே இறுதி ஓவரை 'மலிங்கா' வீச ஆயத்தமானான்.

ராகுலுக்கு இன்னும் பதற்றம் அதிகமானது. இந்த உலக்கோப்பை போட்டிகளில் அதிக விக்கட்டுகளை வீழ்த்தியவன் மலிங்கா. அவன் பந்தின் வேகத்தில் 21 ரன்கள் மேலும் கடினமாக தென்பட்டது.

யுவராஜ்சிங் மலிங்காவின் பந்தை எதிர்நோக்கத் தயாராக உள்ளான்.

இதோ மலிங்காவின் ஓட்டம் தொடங்கிவிட்டது.

யுவராஜ்சிங் கண்சிமிட்டும் நேரத்தில் பந்து அவன் மட்டையை தவிர்த்து, முட்டியில் பட்டு, இலங்கை வீரர்கள் ஒருசேர கோஷமிட்டனர்.

நடுவரின் ஆள்காட்டிவிரல் உச்சிவானை சுட்டிக்காட்டியவுடன் ராகுலின் கண்ணில் நீர் தேங்கத்தொடங்கியது. இருந்தும் அவன் நம்பிக்கை அடுத்து களமிறங்கும் தோனியின் மீது நூறு சதவிகிதம் இருந்தது.

அடுத்த பந்து - தோனியின் கால்களை குறிபார்த்து வீசப்பட்டு, அதை தோனி லாவகமாக திசை திருப்பி இந்தியாவிற்கு ஒரு பவுண்டரி கிடைத்தது.

மூன்றாவது பந்திலும் நான்கு ரன்கள்.

நான்காவது பந்தில் சிக்ஸர்!

ஐந்தாவது பந்தில் ஜயவர்தனேயின் அசாத்திய ஃபீல்டிங்கால் இரண்டு ரன்கள் மட்டுமே கிடைத்தது.

இறுதிப்பந்து.

இந்தியா வெல்ல இன்னும் ஐந்து ரன்கள் தேவை.

இலங்கை வீரர்கள் அத்தனைபேரும் பவுண்டரியை தடுக்க, கோட்டை மதில்சுவரைத் தற்காக்கும் போர்வீரர்களைப்போல் தயாராக நின்றனர்.

ராகுலின் இதயத்தின் கனம் அதிகமானது.

மலிங்காவின் ஓட்டம் தொடங்கிவிட்டது!

ராகுலின் கைகள் நடுங்கியது.

பந்து நிலத்தில் குத்தியவுடன் தோனி மட்டையை விலாசினான். பந்து விண்ணைக்கிழித்துக்கொண்டு பறந்தது.

இந்தியாவின் வெற்றியை சுமந்துகொண்டு பறந்த பந்து, இறுதி மில்லி செக்கண்டில் தில்ஷானின் கைகளில் கட்சிதமாக சிக்கிக்கொண்டது.

ராகுலால் இதை நம்பமுடியவில்லை.

ராகுலின் மனம் பதறியது. செய்வதறியாது தவித்தான்.

தோனியின் கைகளில் உலக்கோப்பையை பார்க்க அவன் எத்தனைதூரம் கடந்து வந்திருந்தான்.

'இல்லை! இந்த முடிவு சரியில்லை!'

இறுதியில் சுற்றும்முற்றும் பார்த்த ராகுல், தான் கடைசியாக பதிவு செய்த ஆட்டத்தை மீண்டும் 'லோடு'(LOAD) செய்தான்.


இப்போது மீண்டும் கடைசி ஆறு பந்து.

மீண்டும் யுவராஜ்சிங். மீண்டும் பந்துடன் மலிங்கா.

'இம்முறை இந்தியா உறுதியாக வெல்லும்.' ராகுல் நம்பிக்கையுடன் தன் விரல்களை 'ப்லேஸ்டேசன் ஜாய்ஸ்டிக்கில்' பதித்து விளையாடத்தொடங்கினான்.

'இம்முறை இந்தியா உறுதியாக வெல்லும்!'

     
முற்றும்.


1 comment:

  1. Thrilling winning moments of INDIA in world cup yet couldn't withstand anxiety even after knowing it is only in play station...

    As is the hope tat India will win in next chance so is the author who keeps on winning each and every time!

    Lots of congrats both to Player and Narrator for WORLD CUP victory...

    ReplyDelete