ஐந்தறிவா? ஆறறிவா?
நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் அதிசய நிகழ்வுகளின் பட்டியலில் இது மிக முக்கியமான ஒன்று - ரெனோ அமைதியாக அமர்ந்திருந்தது. ஏய் நாயே! அமைதியாக இரு என கேட்கும் அதட்டலுக்கும் அதற்கு பதிலாக ரெனோவிற்கு வரும் கோபத்திற்கும் தற்சமயம் வேலை இல்லை.
தன் வீடு மட்டுமல்லாமல் எதிர் வீடு, பக்கத்து வீடு, தெரு முனையிலிருக்கும்
வீடு என அந்த தெரு முழுவதற்கும் ஒரே செல்லப்பிள்ளை என்ற அகந்தை சற்று
அதிகமாகவே இருந்தாலும் தெருவையே ரெனோ கட்டுப்பாட்டிற்குள்
வைத்திருந்ததென்னவோ ஏற்றுகொண்டாகவேண்டிய நிதர்சனமான உண்மை. தன் அனுமதி
இல்லாமல் யாரும் எந்த வீட்டிற்குள்ளும் நுழையவோ, சொல்லிக்கொள்ளாமல்
வெளியேறவோ முடியாது. அவ்வளவு ஸ்ட்ரிக்ட் ஆபீசர்.
பெருமைகள் பலவற்றிற்கு புகலிடமாக இருக்கும் ரெனோவிற்கு
சில பல பிடிக்காத விஷயங்களும் இருந்தது. அவை பற்றிய சுவாரஸ்யமான தொகுப்பு :
1. தண்ணீர் - 'ஆல் டைம் அலர்ஜி! '.
மழை அறவே ஆகாது. குடிப்பதற்கு கூட தண்ணீர் தொடுவது சந்தேகமே. புரியுது
உங்களின் புருவம் உயருவதற்கான காரணம் 'அப்போ குளியல்?!?' அதுதானே? அது
தண்ணீர் சேமிக்கும் முயற்சி. ரெண்டு மூனு மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே.
அதுவும் சாதாரணமாக அல்ல ஒரு போராட்டமே நடத்த வேண்டியிருக்கும். இல்லையெனில்
தீபாவளி பொங்கல் என வருடத்திற்கு ஒரு முறை என்றாலும் டபுள் ஓ.கே. குஷியோ
குஷி தான்.
2. சத்தம் - 'ஷ்ஷ்ஷ்... மெயின்டயின் பின் ட்ராப் சைலன்ஸ்'.
யாராக இருந்தாலும் அனாவசியமாக பேசுவதோ, சிரிப்பதோ, சண்டையிடுவதோ கூடவே
கூடாது. ஆனால் 24 மணி நேரமும் 'ஆன் ட்யூட்டியில்' இடைவெளியின்றி
கேட்டுக்கொண்டிருக்கும் நான்-ஸ்டாப் கொண்டாட்டம் ரெனோவின் சத்தம் மட்டுமே.
அனைவருக்கும் பழகிப்போன அதே சமயம் யாராலும் நிறுத்த முடியாத ஆட்டோமேட்டிக்
அலாரம் சிஸ்டமாகவே மாறி இருந்தது.
3.குழந்தைகள் - 'ஏலியன்ஸ்' . நம்பர் ஒன் எதிரிகள். தன்
வேலை உண்டு தான் உண்டு என்று இருப்பவரிடம் வேண்டுமென்றே சென்று வம்பு
செய்தால் யாருக்கும் கோபம் வரத்தானே செய்யும். அதிலும் ரெனோவிற்கு கேட்கவே
வேணாம் - சற்று அதிகமாகவே வரும்.ரெனோவை வம்பு செய்வதில் குட்டீஸ்களுக்கு
அலாதியான பிரியம். பக்கத்து தெருவிலிருந்தும் வந்து கலாய்ப்பதும்
கிண்டலடிப்பதும் தனக்கு எதிராக அரங்கேறும் குற்றமாகவே பார்த்தது. ஆனாலும்
விட்டுவிடாமல் நீயா-நானா என்று பார்த்துவிட்டு தான் அடுத்த வேலையே. இப்படி
ஆரம்பித்ததுதான் படிப்படியாக வளர்ந்து தற்போது முடிவுக்கு வராத மிகப்பெரிய
'ஈகோ' பிரச்சனையில் வந்து நிற்கிறது. இந்தியா-பாகிஸ்தான் பார்டர்
பஞ்சாயத்து கூட முடிவுக்கு வந்து விடும் ஆனால் இந்த 'சின்ன' பிரச்சனையின்
முடிவு - கணிக்க முடியாத ஒன்று.
4.விருந்தினர்கள் - 'பீவேர் ஆப் மீ '. வீட்டுக்கு வெளியே
நின்று பேசுவதற்கு கூட தடை சட்டம் அமலில் உள்ள போது வீட்டுக்குள்
விருந்தாளிகளை அனுமதிப்பது எந்த யுகத்திலும் நடந்தேறுவதற்கான சாத்தியக்
கூறுகள் இல்லை. அப்படியே எதிர்ப்பை மீறி வீட்டுக்குள் வந்தவர்கள் ஏண்டா
வந்தோம்?!? என்னும் அளவிற்கு கவனிப்பு பலமாக இருக்கும். தில் இருப்பவர்கள்
முயன்று பார்க்கலாம்.
5. பட்டாசு - 'ஸ்டிரிக்ட்லி நாட் அல்லவ்ட்!'. நான்
இங்கே தனி ஆளா கிடந்து திண்டாடுறேன் உங்களுக்கு என்னடா கொண்டாட்டம் வேண்டி
இருக்கு என்று ஒவ்வொரு வெடி சத்தத்திற்கும் அசராமல் பதில் கொடுத்து கொண்டே
தான் இருக்கும். ஆக மொத்தம் பட்டாசு சத்தத்தை காட்டிலும் ரெனோவின்
அலறல்தான் அதிரடியாக இருக்கும்.
இவை அனைத்தும் சின்ன சாம்பிள் மட்டுமே, பட்டியல்
நீண்டுகொண்டே போகும். இவ்வாறு செய்வதை எல்லாம் செய்துவிட்டு ஒன்றும்
தெரியாததை போல 'நான் ரொம்ப நல்லவன்' என்ற பாணியில் சீன்
போடும் ரெனோ நிஜமாகவே நல்ல பிள்ளையாக நடந்து கொள்வதும் உண்டு. இதில்
வியப்பான விஷயம் என்னவென்றால் பல சமயங்களில் ஆறறிவு படைத்த விலங்குகளிடம்
கூட எதிர்பார்க்க முடியாதது ஐந்தறிவு கொண்ட விலங்கிடம் இயல்பாக அமையப்
பெற்றிருந்தது - மனிதத்தன்மை!
முகம் தெரியாத நட்பு, பெயர் தெரியாமல் காதல் என்கிற
ரீதியில் இது ஒரு புதுவிதமான நிகழ்வு. பொதுவாக அன்பு செலுத்துவர்களிடம்
திரும்ப அன்பு செலுத்துவது இயற்கையின் நியதி. அன்பு செலுத்துபவர்களை
புறக்கணிப்பவர்கள் தனி ரகம். ஆனால் எப்பவுமே கிடைக்கப்பெறாத அன்பிற்கு
அடிபணிவது மிதமிஞ்சிய தன்மை - வெகு சிலருக்கே முடியும். ரெனோவின் இத்தகைய
அரிதான பாசத்திற்குரிய நபர் ஒரு சிறுமி. எத்தனையோ சிறுவர் சிறுமியர்களை
கண்டவுடனேயே தலை கால் தெறிக்க ஓட வைக்கும் ரெனோ இதுவரை பார்த்திராத
இனிமேலும் பார்க்க இயலாத ஒருத்தர் மீது அளவுகடந்த அன்புடன் நடந்து கொள்வது
அதிசயிக்கத்தக்கது.
வைஷ்ணவி - பெயரைப்போலவே அவளும் அழகு. பள்ளி
சென்றிருந்தால் ஐந்தாம் வகுப்பு படிக்கும் வயது. அவளுக்கு மிகவும்
பிடித்தது அமைதி. அவளால் உணர முடிந்த மன நிறைவை தரக்கூடிய ஒரே விஷயம்
பாட்டு கேட்பது. வீட்டுக்கு வெளியே அவளை பார்க்கவே முடியாது. இருந்த
இடத்திலிருந்து நகரவே மாட்டாள். எப்பொழுதும் அவளை பார்த்துக்கொள்ளவும்
வேலைகளில் துணை புரியவும் அவளருகே ஒருவராவது இருந்து கொண்டே தான் இருப்பர்
ஏனென்றால் அவளால் மற்ற சராசரி குழந்தைகளைப்போல பேசவோ, சாப்பிடவோ,
விளையாடவோ முடியாது. செய்யாத குற்றத்திற்காக பிறந்ததிலிருந்து தண்டனை
அனுபவிக்கும் ஜீவன் ஆனால் நாள்தோறும் அன்பை மட்டுமே எதிர் நோக்கி
தன் வாழ்கையை உன்னதமாக மாற்றி இருக்கிறாள். இந்த நிலைக்கு சமூகம் சூட்டிய
பெயர் மாற்றுத்திறனாளி. ஒரு விதத்தில் உண்மை தானே? நிறைந்த உடல்
நலத்துடன் நல்லறிவையும் பெற்றிருப்பவர்களுக்கு அன்பின் மதிப்பை
உணருவதற்கான திறன் வாய்ப்பதில்லை. எனவே வைஷ்ணவி இந்த விதத்தில்
மட்டுமல்லாமல் எல்லா நிலையிலும் ஸ்பெஷல் தான்.
தன் தேவைகளை உணர்த்தவும் சந்தோஷம், கவலை போன்றவற்றை
வெளிப்படுத்தவும் அவளறிந்த ஒரே மொழி மற்றும் வழி சத்தமாக அழுவது மட்டுமே.
அப்படியிருக்க ஒரு நாளைக்கு இத்தனை முறை என்ற கணக்கேதும் இன்றி அழுகுரல்
கேட்பது சில நேரங்களில் பலருக்கும் தொந்தரவாக அமைவது சகஜமே. விதிமுறைகளை
அடுக்கி அவைகளை மற்றவர்கள் கடைபிடிப்பதில் குறை இல்லாமல் பார்த்து வரும்
ரெனோ தான் பின்பற்றும் விதிமுறைகளை தளர்த்தி மென்மையாக நடந்து கொண்டது.
ஒருமுறை வைஷ்ணவியின் அழுகுரல் கேட்டுவிட்டால் வேறு எந்த
தலை போகிற பிரச்சனையில் மூழ்கி இருந்தாலும் அதனை தள்ளி வைத்துவிட்டு
அழுகுரல் நின்ற பிறகே நிம்மதிப் பெருமூச்சு விடும். அவளை கவனிக்க ஆளில்லை
என்றால் தானே போய் என்னவாயிற்று என்று பார்த்துவரும் அளவிற்கு நிலை
கொள்ளாது அங்கும் இங்கும் சுற்றித்திரிவதும், அருகில் யார் இருந்தாலும்
அவர்கள் பக்கம் வந்து சத்தம் வரும் திசையை கவனிக்க செய்வதும், கூக்குரல்
கொடுத்து தானும் அழுவது என யாரும் சொல்லிக்கொடுக்காமல் எந்த ஒரு
பயிற்சியுமில்லாமல் ரெனோவின் நியாயமான பாசத்திற்கு சான்றாகும் செய்கைகளில்
சில.
என்னதான் வீட்டின் பாதுகாப்புக்காகவும், சிலர்
பிரியத்துடனும் வளர்க்க நேர்ந்தாலும் மனிதனை விட அறிவில் குறைந்த ஜீவனாக
வலம் வரும் ரெனோவைப்போன்ற விலங்குகளை மட்டுமே விவரிக்க பயன்படுத்தும்
'நன்றியுள்ள' என்ற அடைமொழி எக்காலத்துக்கும் அவற்றிற்கு கனக்கச்சிதமாக
பொருந்தும். அப்படியிருக்க எந்த கணக்கின் அடிப்படையில் ஆறறிவு உயர்ந்தது?
!!!---!!!
Really a very good one.. I hope no one could have understand the story better than me...
ReplyDeleteKarz-u ve grown a lot as writer..
Thanks a lot for ur valuable comment Pras... Its true tat u also would hav dealt with and felt the real situation what i hav described... This is a small dedication for REMO + GENO = RENO... Hope u got it...
Delete