Wednesday, November 24, 2010

கனவு?

கனவு?

"வணக்கம் டாக்டர்"

"வாங்க மிஸ்டர் மனோ. உக்காருங்க. என்ன? இன்னும் அதே பெண்ணோட பிரச்சனையா?"

டாக்டர் சோமசுந்தரத்தின் முன் அமர்ந்திருந்த மனோவிற்கு வயது 25 இருக்கும். முகம் வெளுத்து, கண்கள் சிவந்து, கலவையுடன் தெரிந்தான்.

"ஆமாம் டாக்டர். நேத்தும் அதே கனவுதான்."

சோமசுந்தரம், தன் வழக்கம் போல் தனது டார்ச்சை மனோவின் கண்களுக்குள் காட்டி பிரிசோதித்துக்கொண்டே “நேத்து கனவில் என்ன பாத்திங்க?”

"நேத்து...நேத்து அந்த பெண் இன்னும் அதிகமா பரிச்சயமானாள், டாக்டர்! அப்புறம் நாங்க ரெண்டு பேரும்....." இதுபோன்ற கனவுக் கதைகள் தனக்கு புதிதல்ல என்பது போல், எந்த ஒரு ஆர்வமும் இல்லாமல் தனக்கு முன் இருந்த காகித்ததில், ஏதோ எழுதிக்கொண்டிருந்தார்.

தொடர்ந்து தன் கனவைப்பற்றி பேசிக்கொண்டிருந்த மனோவை, சோமசுந்தரம் இடைமறித்து "சராசரியா, இந்த கனவு உங்களுக்கு எவ்வளவு நேரம் வருதுன்னு சொல்லமுடியுமா?"

"சரியா சொல்ல முடியல டாக்டர். கிட்டதட்ட நான் தூங்க ஆரம்பிக்கிறதுல இருந்து, தூக்கம் கலையிற வரைக்கும் வர்ற மாதிரிதான் உணர்றேன்."

"ஒவ்வொரு நாள் தூக்கத்திலும் முந்தைய கனவு தொடருதா?"

"ஆமாம், டாக்டர்!"

தன்னை இப்போது உற்று கவனிக்கும் டாக்டர் சோம்சுந்தரத்திடம் மேலும் வினவினான். " கனவுகளுக்கு எதாவது அர்த்தம் உண்டா டாகடர்?"

"எலக்டிரிக் ட்ரெய்ன்ல விக்கிற ‘கனவு பலன்கள்’ங்கிற புத்தகத்தையெல்லாம் நம்பாதிங்க மிஸ்டர் மனோ. கனவுங்கறது வேற மாதிரி சமாச்சாரம்."

டாக்டர் மேலும் தொடர காத்திருந்தான். அவன் கண்கள் முழுவதும் கேள்விக்குறிகளாய் சோமசுந்தரத்தைப் பார்த்தது.

டாக்டர், "கனவுங்கறது நம்மோட ஆழ்மன இச்சைகள வெளிய சொல்லுற ஒன்னு. இன்னும் சுலபமா சொல்லனும்னா, நம் ஆழ்மன குப்பைகள வெளியே தள்ளறதுக்கான ஒரு அழகான ஏற்பாடு. நம்ம கம்ப்யூடர்ல 'டெம்பரரி இன்டர்னெட் ஃபைல்'ஸ கிளீன் பண்ணுற மாதிரின்னு வெச்சுகோங்களேன்!"

"அப்ப நான் கனவில் பார்த்த பொண்ணு முழுக்கமுழுக்க என் கற்பனைனு சொல்றீங்களா டாக்டர்?"

"எல்லாமே கற்பனைனு சொல்லமுடியாது. நீங்க சிறுவயதில் இருந்து பார்த்த, ரசித்த ஆசைபட்ட, கற்பனை செய்த பெண்களின் ஒட்டுமொத்த கலவையா கூட இருக்கலாம்."

மனோவின் முகத்தில் இன்னும் சலனம் குறையவில்லை. அவன் மனது அதிகம் கலவரப்பட்டிருப்பது நன்கு தெரிந்தது.

"கவலப்பாடாதிங்க மிஸ்டர் மனோ. எல்லாம் சரியாயிடும். ஒரு இஞ்சக்ஷன் போடறேன். நல்லா தூக்கம் வரும். நாளைக்கு வாங்க, தேவை பட்டால் ஹிப்னடைஸ் பண்ணி க்ளியர் பண்ணிடலாம்"

சோமசுந்தரம் போட்ட ஊசியின் வலியை மனோ உணர்ந்த்ததாக தெரியவில்லை. அவன் கனவைப் பற்றிய சிந்தனையிலேயே ஆழ்ந்திருந்தான்.

மனோ, அந்த அறையை விட்டு வெளியேறும் முன், " அந்த கனவு மீண்டும் வந்தால், என்ன செய்யறது டாக்டர்?"

"என்ன் செய்யறது! அந்த பெண்ணோட நல்லா பழகுங்க. பொண்ணு அழகா இருப்பான்னுவேற சொல்லுறீங்க. நல்லா எஞ்சாய் பண்ணுங்க மனோ." சிரித்துக்கொண்டே விடையளித்தார் சோமசுந்தரம்.

----

ற்றொரு நாள், அதே அறையின் இடப்பக்கம் இருந்த கட்டிலில், கை கால்களை பரப்பி, கண்களை மூடிக்கிடந்தான், மனோ.

சோமசுந்தரம், அவன் காதருகிற்குச் சென்று, “உங்கள் கனவில் வரும் பெண்ணுடைய பெயர் என்ன?”

"ஹேமா!" தூக்கத்தில் உளறுவதைப்போல், திக்கிதிக்கிச் சொன்னான்.

"அந்த பென்ணுக்கு எத்தனை வயதிருக்கும்?"

"இருபத்திரெண்டு"

"எந்த இடத்தில் நீங்கள் இருவரும் சந்தித்துக்கொள்வதாய் கனவில் தோன்றுகிறது?"

"முதலில் ஏதோவொரு திருமண மண்டபம் போல ஒரு இடம். அதன் பிறகு ஒரு ஷாப்பிங்க் காம்பிளக்ஸில். ஆனால் இப்பவெல்லாம் ஒரு ரெஸ்டாரண்டில், அவள் கையில் 'காஃபி மக்'குடன் இருப்பது போல...." வார்த்தைகளை பிய்த்து பிய்த்து வெளியிட்டான்.

டாக்டர், "ஆல்ரைட். மிஸ்டர் மனோ மெதுவா கண் திறந்துகோங்க."

மனோ, மெல்ல தன் கைகால்களை அசைத்து, தன் முழு 'சுய நினைவு' நிலைக்கு வந்து, டாக்டர் சோமசுந்தரத்தின் முன் அமர்ந்தான்.

"இப்ப எப்படி ஃபீல் பண்ணுறீங்க மனோ?"

"இப்ப மனசு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனமாதிரி தெரியுது டாக்டர்."

"உங்களுக்கு இருக்கிற பிரச்சனை ரொம்ப இயல்பானதுதான். எல்லோருக்கும் நடக்கிற ஒன்னு. இந்த பிரச்சனைக்கு ஒரு சைக்கியாடிஸ்டா நான் சொல்லுற தீர்வு - நீங்களா உங்க கனவை முடிச்சுகனும். அதாவது, ஒரு பாம்பு துரத்துற மாதிரி கனவு வந்தால், ஒரு கம்பெடுத்து அந்த பாம்பை அடிக்கிறமாதிரி கற்பனை பண்ணிகுங்க. அதோட அந்த கனவு வராது.'

இந்த தீர்வு, மனோவிற்கு ஒரு நம்பிக்கையை தந்தது. அவன் முகத்தில் சலனரேகைகள் மெல்ல மறையத்துடங்கின. உற்சாகத்துடன் அந்த அறையைவிட்டு விடபெற்றான், மனோ.

---

ந்த ரெஸ்டாரண்டில், சித்தார் ஒலியில் சீன இசை ஏதோ ஒரு மூலையில் இருந்து காற்றை நிரப்பிக்கொண்டிருந்தது. மற்ற அனைத்து இருக்கைகளும் காலியாக இருக்க, ஓர் ஓரத்தில் மனோவும் ஹேமாவும் மட்டும் ஒருவருக்கொருவர் முகம் பார்த்து அமர்ந்திருந்தனர்.

ஹேமா, "ஏன் மனோ ஒரு மாதிரி இருக்க? உடம்பு சரியில்லையா?"

மனோ அவளை மறுமுறை நன்றாக உற்றுப் பார்த்தான். சிந்தனையில் டாகடர் சோமசுந்தரம் சொன்னது மீண்டும் மீண்டும் கேட்டது.

"மனோ?"

"என்ன?" தூக்கத்தில் இருந்து விழித்தவனைப்போல் கேட்டான்.

"ஏன் ஒரு மாதிரி இருக்கன்னு கேட்டேன்"

"தூக்கம் இல்லை." தீர்க்கமாக சொன்னான்

"ஏன்? என்னாச்சு?"

"எல்லாம் இந்த கனவுத்தொல்லைதான்!"

"எந்த கனவு?"

மனோ அவள் கண்களை நேருக்குநேராக பார்த்தான். எச்சிலை விழுங்கிக்கொண்டு, அவளிடம் அழுத்தமாகச் சொன்னான். "இப்போவெல்லாம் என் கனவில் அடிக்கடி ஒரு டாக்டர் வராரு. எனக்கு வைத்தியம் பார்க்கறாரு. என்னை படுக்கவச்சு, ஹிப்னடைஸ் பண்ணுறமாதிரி என்னேன்னமோ செய்யறாரு. என்னிடம், உன்ன பத்திகூட கேள்வி கேட்கறாரு. இதே மாதிரி தினமும் வர்றதுனால ஒழுங்கா தூங்கமுடியாம ரொம்ப சிரமப்படுறேன்."

"கவலைபடாத மனோ. கனவுகளை இந்த மாதிரி பகிர்ந்துகிட்டால், அது மேற்கொண்டு வராதுன்னு சொல்லுவாங்க. அதுபோல உனக்கும் இனிமே இந்த கனவு வராது."

தன் முன் இருந்த காப்பியை இறுதியாக இருமுறை சுவைத்துவிட்டு, "சொல்லமறந்துட்டேன் மனோ. நான் நாளைக்கு ஊருக்கு போறேன். எப்ப் திரும்பிவருவேன்னு தெரியாது. அதனால உடம்பை நல்லா பாத்துக்க. நான் வர்றேன்." விடைபெற்றாள் ஹேமா.


அன்றுமுதல் மனோ, டாக்டர் சோமசுந்தரத்தை பார்க்கவில்லை.


----முற்றும்---

Click here if you like it..

2 comments:

  1. Nice plot... A twist at the end as of which is the real part and which is the dream one involves readers in the story... On the whole its a different try as "dream" and also dream has turned out well in reality...

    ReplyDelete