பொக்கிஷம்!
மண்ணைத் தோண்டி கடலின் தரைமட்டத்தில் புதையுண்டு கிடக்கும் தாதுக்களிலிருந்து, விண்ணைத் தாண்டி பிரபஞ்ச வெளியில் மிதக்கும் நுண்ணிய துகள்கள் வரை இயற்கை மறைத்து வைத்திருந்த அனைத்து ரகசியங்களையும் கண்டறிந்து கைவசம் வைத்திருந்த மனிதன் வாழும் தற்போதைய நவீனயுகத்தில் பிறந்த அதிர்ஷ்டசாலியான என் பெயர் ரித்விக்.
தற்போது பள்ளியில் பயிலும் மாணவன். பின்னாளில், அறிவியல் சார்ந்த துறையில் உலகம் போற்றும்படியான சாதனை புரியவேண்டுமென்ற லட்சியம் மனதோரம் குடிகொண்டுள்ளது. எப்பவும் எனக்கு முதல் இரண்டு நண்பர்கள் அம்மாவும் அப்பாவும் தான். அவர்கள் இருவரும் விண்வெளி அறிவியல் சார்ந்த துறையில் பணியாற்றுவதால், என்னுடைடைய இலட்சியத்தைப் பற்றி பெரிதாக ஆச்சரியப்படுவதற்கு தனியாக எத்தகைய காரணமும் தேவையில்லை.
ஒரு நாள் மாலைப் பொழுதில் பள்ளியில் இருந்து திரும்பிய நான், வழக்கமாக என்னுடைய வருகைக்காக ஆவலாக காத்திருக்கும் அம்மாவிடம் சென்று அன்றைய நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ளவும் இல்லை, அப்பாவுடன் சேர்ந்து ஷட்டில் விளையாடவும் செல்லவில்லை. ஒருவித மனக்குழப்பத்துடன், நேராக எனது அறைக்கு சென்று ஓய்வெடுக்க விரும்பி, ஜன்னலின் ஓரமிருந்த எனது 'டபுள் காட்'டின் மேல் படுக்கையில் ஏறி படுத்து கண்மூடினேன்.
வீட்டில் யாரவது ஒருவருடன் சின்னதாக சண்டை போட்டால் மட்டுமே செல்லமானதொரு கோவத்துடன் நான் இப்படி இருப்பேன் என்று அவர்களுக்கு தெரியும். ஆனால் நேற்றைக்கு அவ்வாறு ஏதும் நடக்காதபோதும் என்னுடைய இத்தகைய செயலுக்கு காரணம் புரியாமல் இருவரும் சற்று குழம்பி இருக்ககூடும், இருந்தும் எதையும் அத்தருணத்தில் பொருட்படுத்தத் தோணவில்லை.
எதிர்பார்த்தவாரே, என்னவாயிற்றோ என்ற பதற்றத்தில் என்னை காண வந்த அம்மாவும் அப்பாவும் நான் கூறிய காரணத்தை கேட்டதும் "ரித்து, ரொம்ப பயந்தே போயிட்டேன்! இதுக்கா இவ்வளவு பீலிங்?" என அம்மாவும் "சில்லி பாய், யோசி! ஒரு நல்லா ஐடியா கிடைக்கும்" என அப்பாவும் கூறியது, 'உன் ப்ராப்ளத்தை நீயே சால்வ் பண்ணிக்கோ' என்பதை சொல்லாமல் சொல்லியதுபோல் இருந்தாலும், ஒரு விதத்தில் 'இது ஒன்னும் நீ நினைக்கிறது போல் கவலை படும்படியானதொரு விஷயமும் இல்லை. உன்னால் முடியும்!' என்று நம்பிக்கை தரும் விதமாகவும் அமைந்து என்னை சகஜ நிலைக்கு மாற்றியது.
நான் கேட்ட வார்த்தை மாயாஜாலத்தின் விளைவாக தெளிவுற்று எனது தேவையை பற்றி மட்டும் முழுமையாக யோசனை செய்யத்துவங்கினேன். சட்டென்று ஞாபகத்திற்கு வந்தது தாத்தா பரிசாக கொடுத்த 'புத்தகம்'. " இது அசாதாரனமான அபூர்வமான ஒன்று. உன் ஆசைகள் - நிழலாக இருந்தாலும் சரி கனவாக இருந்தாலும் சரி, இதில் சேகரித்து வைத்து தேவைப்படும் போது நிஜமாக மாற்றிக்கொள்ளலாம். தக்க சமயத்தில் இது உனக்கு துணை புரியும்" என்ற அவரது வாழ்த்துக்கள் இன்று உண்மையாகவிருப்பது த்ரில் கலந்த சஸ்பென்ஸ்ஸான சூழ்நிலையை உருவாக்கியது.
கொஞ்சம் விருவிருப்புடனும் பரபரப்புடனும் என்னுடைய அறையை புரட்டிப்போட்டு தேடியபோது, கப்போர்டின் மேல் அடுக்கில்,அழகாக கிப்டு பேப்பர் சுற்றிய அட்டைப்பெட்டியினுள் இருந்து, சிப்பிக்குள் இருக்கும் முத்தை தேடி எடுப்பதை போல் அந்த புத்தகத்தை தேடி எடுத்தேன். ஒரு விதத்தில் மட்டுமல்ல எல்லா விதத்திலும் இந்த புத்தகம் முத்தை விடவும் விலை மதிக்க முடியாத பொக்கிஷமாக மாறக் காத்திருந்தது .
காலையிலிருந்து என்னை துளைத்துக் கொண்டிருந்த கேள்விக்கான சரியான விடை இதுவன்றி வேறொன்றுமில்லை. வகுப்பறையில் "அன்றாடம் இயற்கையில் ஏற்படும் மாற்றத்தின் காரணமாக பிற்காலத்தில் மனித சமுதாயத்துக்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாகவும், உலக அழிவிற்கு வித்தாகவும் அமையக்கூடும். அப்படியிருக்க இன்றைக்கு உள்ள நிலையிலாவது இயற்கையை பாதுகாத்து வருக்காலத்தினருக்கு ஒப்படைக்க ஒவ்வருவரும் என்ன செய்ய போகிறீர்கள்? புதுமையான அதே நேரம் செயல் படுத்தகூடியதுமான ஒரு விடை தான் எனது எதிர்பார்ப்பு" என ஆசிரியர் எழுப்பிய புதிருக்கு பதில் என் கைக்குள் இருந்தது.
இந்த புத்தகத்தை இருக்க அணைத்தவாறு, முதலில், இயற்கையின் எந்த பகுதியை பாதுகாக்க வேண்டும் என்ற கேள்விக்குறியுடன் ஜன்னலிலிருந்து வெளியே பார்த்த நொடியில் புலப்பட்ட நிஜம் - இரவு நேரத்தை குறிக்கும் கரிய நிறம், மேக கூட்டத்தினுள் தனது பாதி முகத்தை மறைத்து மீதி முகம் தெரியும் படி என்னை பார்த்து சிரித்த நிலாப் பெண், வானமெங்கும் சிதறிக்கிடந்து கண்சிமிட்டும் நச்தத்திரங்கள் - இந்த மூவர் கூட்டணி கொள்ளைகொள்ளாத மனமே இருக்க முடியாது. ஆதலால் முதல் பாதுகாப்பு இவற்றிற்கே.
மெதுவாக ஜன்னலின் வெளியே கையை மேல் நோக்கி நீட்டி இரவின் இருளை கை நிறைய அள்ளி சிந்தாமல் சிதறாமல் புத்தகத்தின் முதல் பக்கம் முழுவதும் தடவினேன். பின்னர், ஒரு கண் மூடி, இரு விரலை விரித்து, நிலவை அளவெடுத்தேன். விரலுக்குள் அடங்கிய நிலவை பத்திரமாக வானிலிருந்து பிரித்து எடுத்து பக்கத்தின் நடுவே ஒட்டினேன். அடுத்ததாக முடிந்த அளவு இரு கைகளிலும் நச்சத்திரங்களை அள்ளி, தனித்திருந்த நிலவுக்குத் துணையாக பக்கம் முழுதும் தூவி முடித்து பார்த்த பொழுது, சற்று முன் வெளியே தூரத்தில் தெரிந்த இரவு வானத்தை விட தற்போது கையிலிருந்த இரவு மிகவும் பிரகாசமாக ஒளிர்ந்ததை நம்ப முடியாமல், வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தேன்.
எனது ரசனை என்னும் தெளிந்த நீரோட்டத்தில் கல் எரிந்து கவனச்சிதறல் என்னும் நீரலைகளை உண்டாக்கியது, "ரித்து அங்கே என்ன செய்ற? இங்க ஒரு நிமிஷம் வந்து பாரேன்!" எனது அம்மாவின் பாசமான குரல். கீழே இறங்கி, சந்தோஷத்தில் தலை கால் புரியாமல் ஓடிய நான் நின்றது எங்கள் வீட்டின் பால்கனியில். அம்மா அப்பா இருவரும் வியந்து பேசி ரசத்துக்கொண்டிருந்தது நான் பார்த்து மகிழ்ந்த அதே காட்சியை தான்! "என்றுமில்லாமல் இன்று நிலா சற்று பெரியதாகவும் பிரகாசமாகவும் இருக்கிறது!", "என்ன காரணம்னு தெரியல ஆனால் பார்பதற்கு ரொம்ப ரொம்ப அழகாக, பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல உள்ளது" மாறி மாறி நிலவிற்கு புகழாரம் சூட்டிய தருணத்தில் கரண்ட் கட் ஆக, அந்த நிமிடம் எங்கள் அனைவரின் ரசனைக்கு மேலும் மெருகேற்றியது.
"இப்போ நாம சேர்ந்து ஒரு போட்டோ எடுத்தா எப்படி இருக்கும்?" அம்மா கேட்க, "செம ஐடியா! ரித்விக், கெட் மீ தி டிஜி கேம்" அப்பா சொல்ல, இப்படியொரு சந்தர்பத்தை மிஸ் பண்ண விரும்பாத நானும் விரைந்து சென்று கேமராவுடன் திரும்பினேன். சிரமப்பட்டு செட்டிங்க்ஸ் எல்லாம் மாற்றி - 'டே லைட் மோட்', 'ஆட்டோ க்ளிக்' என பலவற்றை அட்ஜஸ்ட் செய்து கரெக்டான ஆங்கிள்ல போகஸ் செட் செய்துவிட்டு வந்து என்னுடனும் அம்மாவுடனும் நின்றுகொண்டார் அப்பா. அவர்கள் இருவரும் அருகருகே நிற்க, அவர்களுக்கு முன் நின்ற எனது கழுத்தை சுற்றி தனது இரு கைகளையும் கோர்த்து தனது பக்கம் சிறிது இழுத்த அம்மாவின் செய்கையை பார்த்த அப்பா என் தோள் மீது ஒரு கையும் அம்மாவின் தோள் மீது ஒரு கையும் வைத்து அணைத்துக் கொண்டார். சமயோஜிதமாக செயல்பட்ட நடவடிக்கைக்காக அம்மாவும் அப்பாவும் ஒருவரையொருவர் பார்த்து சிரிக்க, இந்த ஆர்பாட்டத்தை பார்த்து பின்னயிலிருந்த நிலவும் சிரிக்க, நான் மட்டும் கையிலுருந்த பொக்கிஷம் தெரியும்படி கேமராவை நோக்கி கண்ணடித்து, 'தம்ப்ஸ் அப்' போஸ் காட்டி புன்னகைத்தேன். இது தான் பெர்பெக்ட்டான டைமிங் என்ன தனக்குத்தானே முடிவெடுத்த கேமராவும் சரியாக அந்த நொடியில் போட்டோவை பதிவு செய்தது.
அம்மாவும் அப்பாவும் நிலவை நோக்கி தங்களின் வர்ணனயை தொடர்ந்தவாரே எடுத்த நிழற்படத்தை ரசித்துக்கொண்டிருக்க, நானோ பொக்கிஷத்தின் முதல் பக்கத்திலிருந்த நிஜமான படத்தை ரசிக்கலானேன். இதே போல் வருக்காலத்தினரும் இயற்கையை மாசில்லாமல் ரசிக்க வழிவகுத்ததை எண்ணி மெய் சிலிர்த்தேன்!
!!!---!!!
No comments:
Post a Comment