Thursday, July 7, 2011

தொண்டைமான்

தொண்டைமான்


குனாத்.கே.தொண்டைமான்!

எத்தனை வசீகரமான இளைஞன். என் எழுபது வருட வாழ்க்கையில், எந்த ஒரு மனிதனைக் கண்டும் இத்தனை வியந்ததில்லை. எத்தனை அறிவு! எத்தனை ரசனை!

ரகுனாத், முதன் முதலில் என்னை ஒரு 'வீடியோ கால்' மூலம் தொடர்பு கொண்டான். நான் என் வாழ்நாளில் மேற்கொண்ட அத்தனை தொல்பொருள் ஆராய்ச்சிகள் பற்றியும் பேசி சிலாகித்தான். அவன் அகழாய்வியல் அறிவு என்னை பிரமிக்க வைத்தது.

27 வயதை தாண்டிறாத ஒரு இருபத்தியோராம் நூற்றாண்டு இளைஞன், புறநானூற்றை ஆராய்ந்து தொல்பொருள் ஆய்விற்கு விளக்கம் தருவதை என்னால் அத்தனை எளிதில் ஜீரணீக்க முடியவில்லை.

இப்போது அவனை பார்க்கத்தான் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அம்மனிச் சத்திரத்திற்கு சென்றுகொண்டிருக்கிறேன். என் எழுபது வயதில், இதயக் கோளாறு, ரத்த அழத்தம், சக்கரைநோய் என் அனைத்தையும் சுமந்துகொண்டு நான் செல்வது, அந்த வசீகரனை சந்திப்பதற்காக மட்டுமல்ல!

என் வாழ்கையின் பாதியை செலவழித்தும், முடிக்கமுடியாமல் போன பல்லவர்களைப் பற்றிய ஆராய்ச்சிக்கான பதில் அவனிடம் உள்ளது!

இந்த ரகுநாத் லேசுபட்டவனல்ல! 15ஆம் நுற்றாண்டைச் சேர்ந்த அரந்தாங்கி தொண்டைமான்களின் நேரடி வம்சாவழியை சேர்ந்தவன்.

திருவாடுதுரை ஆதீனத்திற்கு வழங்கிய பதினாறு தாமிரத்தகடுகள் போக தன் பாட்டனார் அவனுக்கு விட்டுபோன மற்ற தகடுகளை வீடியோவில் பார்த்தபோதுதான், என் வியப்பு உச்சியை தொட்டது.

அதுமட்டுமின்றி, அம்மனிச்சத்திரத்தில் அவன் தோட்டத்திலேயே உள்ள ஒரு கோவிலின் கல்வெட்டில்தான் எனக்கான பொக்கிஷம் காத்திருப்பதாக அவன் சொன்னான்.

என் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கப் போகும் பொக்கிஷம் அது!

அரந்தாங்கி தொண்டைமாங்கள் பல்லவர்களுடன் உறவு வைத்திருந்த காலத்தில் கட்டப்பட்டது இந்த கோவில்! அந்த கல்வெட்டில் பதிந்திருக்கும் வார்த்தைகளின் அர்த்தத்தை அவனுக்கு விளக்க, நான் அங்கு வரவேண்டும் என்று என்னை கேட்டுக்கொண்டான். இந்த பரஸ்பர தேவைதான் என் பயணத்தின் வேர்.

ஆனால் இத்தனை ஆச்சரியமானதொரு இளைஞன், என்னைதேடியே வந்திருப்பதை இன்றும் என்னால் நம்பமுடியவில்லை. கடவுள் என்று ஒருவன் உண்மையிலேயே இருக்கிறான் போல!


தோ அவன் சொன்ன அம்மனிச்சத்திரத்தை அடைந்துவிட்டேன்.

அவன் கூறிய நாச்சியார் தோட்டத்து பங்களாவிற்கு செல்வதற்கான வழியை அந்த ஊர் மக்களிடம் விசாரித்தபோதுதான் அத்தனைபேர் முகத்திலும் ஒரு அதிர்ச்சியை பார்த்தேன்.

“அந்த பங்களாவா! அங்க எதுக்கையா போரீங்க? அது பாழடஞ்சில்ல கிடக்குது. அம்பது அறுபது வருசத்துக்கு முன்ன அந்த வீட்டுல இருந்தவங்க பாதிபேர் ஒருத்தன ஒருத்தன் அடிச்சுகிட்டு செத்துபோயிட்டாங்க. மிச்சமிருந்த கொஞ்சபேரும் அங்க இருக்க முடியாம வெளிநாட்டுக்கு போயிட்டாங்க. ஆனா இன்னமும் அங்க ஏதோ ஆவி நடமாட்டம் இருக்கிறதா ஒரு பேச்சு உண்டு. நீங்க எதுக்குங்க அங்கயெல்லாம போயிகிட்டு. ஊர்ல திருவிழா நடக்குது, இருந்து பாத்துட்டு உங்க ஊருபக்கமே போயிடுங்க!”

இதுபோன்ற கதைகளெல்லாம் எல்லா கிராமத்து பங்களாவிற்கும் பொதுவான ஒன்று. என் அகழ்வாராய்ச்சி வாழ்க்கையில் இதுபோல எத்தனை கேட்டிருக்கிறேன். அதனால் விடாப்பிடியாக அவர்களிடம் வழியைகேட்டுக்கொண்டு, அந்த ஒத்தயடிப் பாதையில் நடக்க ஆரம்பித்தேன்.

அந்த முற்காடுகளை பிளந்துகொண்டு சென்ற ஒத்தையடிப் பாதையில் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் நாச்சியார் பங்களா உள்ளதாக ஊர் மக்கள் சொன்னார்கள். என் பொக்கிஷத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறேன்!

கொஞ்ச தூரம் சென்றபின் பனைமரக்காடுகளினூடே சென்றது அந்த பாதை.

அந்த காட்டில் ஏதோ ஒரு துற்நாற்றம் என் மூளையை திண்றது. கொஞ்சம் தொலைவில், பாதைக்கு வலதுபுறத்தில் நான் கண்ட காட்சி என்னை திகைக்கவைத்தது.

ஒரு பெண்ணின் உடலை சில பிணந்திண்ணிக் கழுகுகள் மேய்ந்துகொண்டிருந்தது. அந்த அழுகிய உடலின் பாகங்கள் அந்த காட்டில் அங்குமிங்குமாய் சிதறிக்கிடந்தது. முதன் முறையாக என் வாழ்நாளில் என்னை நடைதள்ளாட வைத்தது அந்த காட்சிகள்.

அந்த காட்சியை முடிந்தவரை புறக்கணித்து என் பாதையில் நான் முன்னேறினேன்.

அந்த பாதை மேலும் ஒரு சுடுகாட்டை கடந்து சென்றது. அந்த சுடுகாடு, தற்போதைய பயன்பாட்டில் இல்லை என்பது நன்றாக தெரிந்தது. மேலும், அதில் சில கல்லரகள் சிதைந்து அதன் உள்ளே உள்ள சமாச்சாரங்களை காட்டியது.

இந்த காட்சிகளால் நான் மனம் விடவில்லை. இதெல்லாம் தான் என் பொக்கிஷத்தை இத்தனை ஆண்டுகள் பாதுகாத்துவந்ததாகவே கருதிக்கொண்டேன்.


சில நூறு அடிகளில் ரகுநாத் கூறிய பங்களா என் கண்முன் விரிந்தது.

முற்கள் சூழ்ந்து, கட்டிடம் சிதைந்து, பங்களா கொஞ்சம் பாழடைந்துதான் இருந்தது. என் பிராயானத்தின் கலைப்பு கொஞ்சம் நிழல் கேட்டதால் நேரம் செலவிடாமல் உள்ளே சென்றேன்.

முகப்பில் பெரிய அறை, தூசியின் கூடாரமாக தென்பட்டது. சில வனவிழங்குகளின் தலைகள் புழுதியடைந்து சுவற்றில் தொங்கிக்கொண்டிருந்தது. சில ஓவியங்கள் தூசியினால் முழுவதுமாக மூடிக்கிடந்தது. ஆனால் ரகுநாத் இங்கு இருப்பதாகத்தானே சொல்லியிருந்தான்!

என் மனதில் கொஞ்சம் சந்தேகம் நிழலாடியது.

என் செல்போனை எடுத்துப் பார்த்தேன். துளியும் கூட 'சிக்னல்' இல்லை. பின் எப்படி இங்கிருந்து எனக்கு தொடர்பு கொண்டான். அதுவும் 'வீடியோ கால்'!

என் சந்தேகம் மெல்ல மெல்ல பயமாக உருமாறியது.

அங்கிருந்த ஒவ்வொரு அறையாய் அவனை தேடினேன். அப்போதுதான் எனக்கு பொறிதட்டியது.

அவன் வீடியோகாலில் பேசிய மொழி - “ ....பங்களாக்கு பின்னால் ஒரு தோட்டம் இருக்கு. ஆங்கோர் கோவில் இருக்கு. அந்த கோவில் கல்வெட்டில்.....”

'ஆங்கோர் கோவில்!' - இது சமீபத்திய மக்கள் பேசும் தமிழல்ல! அப்படியென்றால் அவன்...

என் சந்தேகத்திற்கு விடைகாணும் வேளையிலே, நான் அந்த பங்களாவின் மாடியிலுள்ள ஒரு அறைக்குள் நுழைந்துவிட்டேன்.

ஆச்சரியம். அந்த அறை, ஒரு துளி தூசிகூட இல்லாத சுத்தமான அறை. பளபளக்கும் ஆளுயரக்கண்ணாடி. அதன் முன் ஒரு ஜாடியில் தெளிந்த குடிநீர்!

எனக்கு தலை சுற்றியது. வினாடிப்பொழுதில் வேறு உலகத்திற்கு வந்ததைப்போல உணர்ந்தேன்.

அறையை சுற்றிப்பார்த்துக்கொண்டிருந்த எனக்கு அதிர்ச்சியின் உச்சக்கட்டமாவ் என் முன் தோன்றியது அந்த ஓவியம்.

ராஜவுடையில், கையில் வீரவாளுடன் ரகுநாத்!!

நான் வீடியோவில் பார்த்த அதே முகம்! அதே புருவம்! அதே கண்கள்! அதே சிரிப்பு!

அந்த ஓவியத்தின் கீழ் 'ராஜா ரகுநாத தொண்டைமான்' என்று சிவப்பு மையில் எழுதியிருந்ததை படித்தவுடன் என் முதுகுத்தண்டில் சில்லென்று உணர்ந்தேன். என் இதயத்தில் ஐஸ் கத்தியால் குத்தியதைப் போல் இருந்தது அந்த சிரிப்பு.

என் காதுக்குள் 'ஆங்கோர் கோவில்! ஆங்கோர் கோவில்!' என்று சத்தமாக மீண்டும் மீண்டும் கேட்டது.

என் உடல் பதறியது.

மூச்சுவிட கடினமாக பட்டது.

என் நிலை தள்ளாடியது.


சட்டென்று என் வலது தோள்பட்டையில் ஒரு அழுத்தத்தை உணர்ந்தேன்! குனிந்து பார்த்தால் ஒரு 'கை'! ரத்தமற்று, பச்சை நரம்புகள் தெரிய வெளீரென்று ஒரு கை!

அவ்வளவுதான்! என் இதயம் இறுதியாக ஒரு முறை துடித்துக்கொண்டது.


என்ன சார்? என் தாத்தா என்னைப் போலவே இல்லை? நான் அவரு மாதிரியே இருக்கிறதுனாலதான் எனக்கும் அவர் பேரையே வச்சுட்டாங்களாம்!” என்று அவன் கூறியது என் மூளையை எட்டும் போது என் இதயம் முழுவதுமாய் செயலிழந்துவிட்டது!

என் இறுதிச் சொட்டு உயிரும் தொண்டைமான்களுடன் சேர்ந்துகொண்டது!



முற்றும்.



2 comments:

  1. முற்றும்!

    கதையுடன் சேர்த்து அப்பெரியவருக்கும்!

    திகில் கலந்த சிரிப்பு "தொண்டைமான்!"

    ReplyDelete
  2. தொண்டைமான் மேற்கொண்ட முயற்சி தோற்றாலும், தொண்டைமானை வெளிக்கொணர மேற்கொண்ட பெரும் முயற்சி தோற்கவில்லை!

    இறுதியில் "தொண்டைமான்"ஆக வென்று விட்டாய்!

    Horror theme too, has worked out well...

    ReplyDelete